/

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் காவலர் சித்தாண்டி சிபிசிஐடி போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :4 பிப்ரவரி 2020, 10:57 am

DIN

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமறைவாக இருந்த காவலரை சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன், பாலசுந்தர்ராஜ், முறைகேடு செய்து தேர்வு எழுதிய ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே வேடதாங்கல் பகுதியைச் சேர்ந்த ம.கார்த்தி, ஆவடி அருகே உள்ள ஏகம்பர சத்திரத்தைச் சேர்ந்த ம. வினோத்குமார், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தைச் சேர்ந்த க. சீனுவாசன் உள்ளிட்ட ஏராளமானோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், தீவிர விசாரனை மேற்கொண்டதில் சென்னை மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த காட்டுராஜா மகன் சித்தாண்டி என்பவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் உதவியுடன் சித்தாண்டி மனைவி பிரியா, அவரது சகோதரர்கள் வேல்முருகன், கார்த்தி ஆகியோர் மட்டுமின்றி வேல்முருகன் மனைவிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு மூலம் வேலை வாங்கி கொடுத்திருப்பது தெரிய வந்தது. 

இதுதவிர, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஏராளமானோருக்கு வேலை வாங்கி கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் காரைக்குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்த சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். மேலும், அதே அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றிய இளங்கோவன் உள்பட சிவகங்கை மாவட்டத்தில் ஏனைய அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அலுவலர்கள் குறித்தும் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு தலைமறைவாக இருந்த சித்தாண்டி என்பவர் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூர் அருகே கலைக்குளத்தில் உள்ள அவரது உறவினர் ஜெயசுந்தரம் என்பவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவலறிந்த சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று தலைமறைவாக இருந்த சித்தாண்டியை கைது செய்து மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். 

இதுபற்றி சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூறியதாவது: குரூப் 4 முறைகேடு தொடர்பான விசாரணையில் சித்தாண்டி முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை தற்போது கைது செய்துள்ளோம். மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை செய்த பின் சென்னைக்கு அழைத்துச் செல்ல உள்ளோம். விசாரணையில் தேர்வர்களிடம் ரூ. 13 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏராளமானோரை பணிக்கு அனுப்பியது தெரிய வந்துள்ளது. அவரிடம் முழுமையாக விசாரணை செய்தால் மட்டுமே பணிக்கு அனுப்பியவர்களின் விவரம் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவரும் என சிபிசிஐடி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.