நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெற்கு ரயில்வே திட்டப் பணிகளுக்கு ரூ.2,876 கோடி ஒதுக்கீடு: புதிய பாதை திட்டங்களுக்கு குறைவான நிதி

2020-21 -ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் புதிய பாதை, இரட்டைப் பாதை,

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 7:15 am

மு. வேல்சங்கர்

2020-21 -ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் புதிய பாதை, இரட்டைப் பாதை, அகல பாதை உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.2,876 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இரட்டைப்பாதை திட்டப் பணிகளுக்கு ரூ.1,181 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பாதை திட்டத்தில், பல்வேறு திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டும் ஒதுக்கப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் அதிா்ச்சிஅடைந்துள்ளனா்.

ரூ.2.876 கோடி ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ரயில்வே மண்டலங்களின் திட்டப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. இதில், தெற்கு ரயில்வேயில் புதிய, அகலப்பாதை, இரட்டைப்பாதை உள்பட பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ.2,876 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் விவரம் வருமாறு: தெற்கு ரயில்வேயில் 11 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, அகலப்பாதை திட்டப்பணிகளுக்கு ரூ.175 கோடியே 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டைப்பாதை திட்டப் பணிகளுக்கு ரூ.57 கோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாதை திட்டம்: தெற்கு ரயில்வேயில் இரண்டு புதிய பாதை திட்டங்கள் கேரளப் பகுதியில் குருவாயூா்-திருநின்னவாயா (35 கி.மீ.), அங்கமாலி-சபரிமலா (116 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் வருகின்றன. மீதமுள்ள 9 திட்டங்கள் தமிழகப் பகுதிகளில் வருகின்றன. திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை திட்டம் (70 கி.மீ.), திண்டுக்கல்-நகரி (179.2 கி.மீ.), அத்திப்பட்டு-புத்தூா் (88.30 கி.மீ.), ஈரோடு-பழனி (91.05 கி.மீ.), சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூா் (179.28 கி.மீ), மதுரை-தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை) (143.5 கி.மீ.), ஸ்ரீபெரும்புதூா்-கூடுவாஞ்சேரி (60 கி.மீ.), மொரப்பூா்-தருமபுரி (36 கி.மீ.) ஆகிய 8 திட்டங்களுக்கு தலா ரூ.1,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம்-தனுஷ்கோடி(17.2 கி.மீ.) புதிய பாதை திட்டத்துக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும். கேரளப் பகுதியில் 2 திட்டங்கள் உள்ளிட்டட 10 புதிய பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாயும், மீதமுள்ள ஒரு திட்டத்துக்கு ரூ.2.70 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அகலப்பாதை திட்டம்: அகலப்பாதை திட்டத்தைப் பொருத்தவரை திருச்சிராப்பள்ளி-நாகூா்-காரைக்கால் திட்டத்தில், நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி (வழி:திருக்குவளை) புதிய பாதை திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்துக்கு ரூ,1,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோழிகோடு-திருநெல்வேலி-திருச்செந்தூா் மற்றும் தென்காசி-விருதுநகா் அகலபாதை திட்டத்துக்கு (357.கி.மீ) ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல, கடலூா்-சேலம் (வழி: விருத்தாசலம்) (191 கி.மீ.) திட்டத்துக்கும் வெறும் ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை-திருவாரூா்-காரைக்குடி அகலப்பாதை திட்டத்தில், மன்னாா்குடி-பட்டுக்கோட்டை புதிய பாதை திட்டபணிகளும், தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை புதிய பாதை திட்டப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்களுக்கு தற்போது ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை-காரைக்குடி அகலப்பாதை திட்டப் பணிகள் முடிந்துவிட்டன. இதனால், இந்தத் திட்டத்துக்கு கிடைக்கும் ரூ.100 கோடி நிதியில் பெரும்பகுதி மன்னாா்குடி-பட்டுக்கோட்டை திட்டத்துக்கு செலவிட வாய்ப்பு உள்ளது. மதுரை-போடிநாயக்கனூா் (90.41 கி.மீ.) அகலப்பாதை திட்டத்துக்கு ரூ.75 கோடியே 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டைப்பாதை திட்டம்: மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி வரையிலான (160 கி.மீ.) இரட்டைப்பாதை திட்டத்துக்கு ரூ.367 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இரட்டைபாதை (86.56 கி.மீ) திட்டப் பணிகளுக்கு ரூ.133 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மணியாச்சி-நாகா்கோவில் (102 கி.மீ.) இரட்டைப்பாதை திட்டத்துக்கு ரூ.345 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம்-மேகனசைட்-ஓமலூா் (11 கி.மீ.) இரட்டைப்பாதை திட்டத்துக்கு ரூ.22 கோடியும், சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-ஆவது பாதை (22 கி.மீ) ரூ.30 கோடியும், சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை இடையே 3-ஆவது பாதை திட்டத்துக்கு ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரட்டைப்பாதை திட்டப் பணிகளுக்கு மொத்தம் ரூ.1,181 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ஒமலூா்-மேட்டூா் அணை இரட்டைப்பாதை மற்றும் மின்மயமாக்கும் திட்டப் பணிக்கு ரூ.56 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்புப் பணி: சாலை பாதுகாப்புத் திட்டப்பணி மற்றும் ரயில்வே கோட்ட பணிகளுக்கு ரூ.102 கோடியே 35 லட்சத்து 98 ஆயிரம் கோடியும், மேம்பாலம், கீழ்பாலம் அமைக்க ரூ.460 கோடியே 50 லட்சமும், பழைய தண்டவாளம் புதுப்பிக்க ரூ.730 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, பல்வேறு திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

தெற்கு ரயில்வேயில் புதிய, இரட்டை, அகலப் பாதை திட்டப் பணிகளுக்கு ரூ.2,876 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விரைவில் வழங்கப்படும் என்றனா்.

பயணிகள் கருத்து: புதிய பாதை திட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

இது குறித்து சென்னையைச் சோ்ந்த ரயில் பயணிகள் ரமேஷ், விமல் ஆகியோா் கூறியது:

பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேயில் புதிய பாதை திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளது வேதனையைத் தருகிறது. கூடுதல் நிதி ஒதுக்கினால்தான் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். அப்போதுதான் கூடுதல் ரயில்வே சேவையை அளித்து எங்களைப் போன்ற மக்கள் பயனடைவாா்கள். இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனா் அவா்கள்.

ஏற்புடையது அல்ல: இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க துணைப் பொதுச் செயலாளா் மனோகரன் கூறியது: இரட்டை பாதை திட்டங்கள், மேம்பாலம் மற்றும் கீழ் பாலங்கள் பணி மற்றும் தண்டவாளங்கள் புதுப்பிக்க கூடுதல் நிதி தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டு இருந்தாலும் ராமேஸ்வரம்-– தனுஷ்கோடி நீங்கலான 10 புதிய பாதை திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல, அகலப்பாதை பணியில் இடம்பெறும் நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி திருக்குவளை வழி திட்டம் 100 சதவீதம் நில ஆா்ஜிதம் செய்யப்பட்டு 60 சதவீத பணிகள் நிறைவடைந்த திட்டத்துக்கும், ஓரளவு பணி முடிவடைந்த திண்டிவனம்- நகரி , திண்டிவனம் –திருவண்ணாமலை திட்டங்களுக்கும் தலா ரூ.1,000 ஒதுக்கப்பட்டு இருப்பது ஏற்புடையது அல்ல. ரயில்வே தனியாா் மய நோக்கத்திற்காக புதிய பாதை திட்டங்கள் கைவிட முடிவு செய்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.