ராமதாஸுக்கு நன்றி தெரிவித்த கருணாநிதி: ஆரோக்கிய அரசியலை நினைவுகூரும் ஜி.கே. மணி

பாமக நிர்வாகி ஒருவர் கருணாநிதியை விமரிசித்த விவகாரத்தில், ராமதாஸ் தலையிட்டு மன்னிப்புக் கேட்க வைத்ததாகவும் அதற்கு கருணாநிதி நன்றி தெரிவித்ததாகவும் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
ராமதாஸுக்கு நன்றி தெரிவித்த கருணாநிதி: ஆரோக்கிய அரசியலை நினைவுகூரும் ஜி.கே. மணி


பாமக நிர்வாகி ஒருவர் கருணாநிதியை விமரிசித்த விவகாரத்தில், ராமதாஸ் தலையிட்டு மன்னிப்புக் கேட்க வைத்ததாகவும் அதற்கு கருணாநிதி நன்றி தெரிவித்ததாகவும் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் கண்ணையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலாசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

"தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக பாமக வளர்ந்துள்ள நிலையில், அடுத்த வருடம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் பணிகளை கட்சித் தொண்டர்கள் இப்போதே தொடங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு கிராமத்திலும் வீடுவீடாகச் சென்று ஆதரவு திரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் வரும் பங்குனி உத்தர பெருவிழாவினையொட்டி, பாமக சார்பில் யாகம் நடத்தப்பட உள்ளது. இந்த யாகத்தில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்" என்றார்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி,

"தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது டாக்டர் ராமதாசுக்கும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றி. இந்த விஷயத்தில் பொதுத்தேர்வு நடத்தக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. உடனடியாக இதற்கான சட்டத்தை தமிழக அரசு மத்திய அரசு ஒப்புதலுடன் கொண்டு வர வேண்டும்.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசிய அளவில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையம் தொடங்கியுள்ள நிலையில், இதைப் போல தமிழகம் முழுவதும் கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்க அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டத்தினை நிர்வாக வசதிக்காகவும், அரசின் நலத்திட்டங்கள் விரைவாக பொதுமக்களை சென்றடையும் வகையிலும் உடனடியாக பிரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் நீராதாரம் நீடித்து இருக்கும் வகையில், காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்திற்காக நடப்பாண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் முன்வர வேண்டும்.

பாமகவின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி. மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள கிளை நதிகளான சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளுடன் இணைக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்றார்.

இதையடுத்து, ஊடகங்கள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர்,

"தரக்குறைவாக பேசுவது ஆரோக்கிய அரசியலுக்கு இடம் அளிக்காது. இந்தப் பேச்சு கண்டனத்துக்குரியது. முன்பொரு முறை பாமகவைச் சேர்ந்த ஒருவர் திமுக தலைவர் கருணாநிதியை விமரிசித்தபோது, டாக்டர் ராமதாஸ் தலையிட்டு மன்னிப்பு கேட்க வைத்தார். அதற்கு கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி கூறினார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com