தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பேரவையில் தீர்மானம்! ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், பிகார் மாநிலத்தில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையிலும், மேலவையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக சாதிவாரி  கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு மாநிலங்களில் எழுந்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

பிகார் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், பிகாரில் முழுமையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், பிகாரைக் கடந்து நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள மூன்றாவது மாநிலம் பிகார் ஆகும். ஏற்கனவே கர்நாடகத்தில் சித்தராமய்யா ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு வழங்கத் தொடங்கி  70 ஆண்டுகள் ஆகின்றன. தேசிய அளவில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக்கால இந்தியாவின் நிலப்பரப்புக்கும், இன்றைய இந்தியாவின் நிலப்பரப்புக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. ஆனாலும், இடஒதுக்கீடு 90 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் அரசால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்படுவது நியாயப்படுத்த முடியாததாகும்.  அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ள இந்தியாவால் இத்தனை ஆண்டுகளாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாதது துரதிருஷ்டமாகும்.

இந்தியாவில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக  ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு இணையான விகிதத்தில் அப்பிரிவினரின் மக்கள்தொகை இருப்பதை நிரூபிக்காவிட்டால், அப்பிரிவுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இந்த அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மட்டும் தான்.

அதனால் தான் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 40 ஆண்டுகளாக போராடி வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6-ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. எனவே, இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழக  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; தேவைப்பட்டால் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com