கூத்தாநல்லூர்: குறுவை பயிர் காப்பீடு செய்ய கூடுதல் அவகாசம் கோரி வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் குறுவை பயிர் காப்பீடு செய்ய 15 நாள்கள் நீட்டிப்பு செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம். சுதர்ஸன் வலியுறுத்தியுள்ளார்.
கூத்தாநல்லூர்: குறுவை பயிர் காப்பீடு செய்ய கூடுதல் அவகாசம் கோரி வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் குறுவை பயிர் காப்பீடு செய்ய 15 நாள்கள் நீட்டிப்பு செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம். சுதர்ஸன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளரும், விவசாயியுமான எம். சுதர்ஸன் கூறியது: 

"கூத்தாநல்லூர் வட்டம் லெட்சுமாங்குடி மரக்கடைப் பகுதியில் ஒரே குடும்பத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பிரதான சாலையின் அப்பகுதி அடைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள கடைகளில் உரக்கடையும் ஒன்று. கூத்தாநல்லூர் பகுதியில் ஒரே ஒரு உரக்கடைதான் உள்ளன. அந்தக் கடையும் கரோனாவால் மூடப்பட்டுள்ளது. இதனால், உரம், பூச்சி மருந்து, விதைகள் வாங்க முடியாமல் விவசாயில் தவிக்கிறார்கள். 

அதனால், விவசாயிகளின் நலனுக்காக, அப்பகுதியில் உள்ள உரக்கடையை மட்டும் திறப்பதற்கு, மாவட்ட ஆட்சியர் ஆணைப் பிறப்பிக்க வேண்டும். இப்பகுதியில் வேறு உரக்கடைகள் இல்லை. மன்னார்குடி, வடபாதிமங்கலம், வேளுக்குடி, கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களுக்குத்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

குறுவைப் பயிரில் ஒரு வாரத்திற்குப் பிறகு உரம் தெளிக்க முடியாது. குறுவை என்பதே 100 நாள் பயிர்தான். 50 நாள்களுக்குள் உரம் அடித்து முடிக்க வேண்டும். கரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. 

அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டன. குடும்ப அட்டைக்கு 5 முகக்கவசங்களும், கிருமிநாசினியும் வழங்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். தமிழக அரசு 2 முகக்கவசங்கள் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஒரு குடும்பத்தில் 5 அல்லது 6 பேர்கூட உள்ளனர். 2 முகக்கவசம் மட்டும் கொடுத்தால், மற்றவர்கள் என்ன செய்வது. தமிழக அரசு யோசித்து, 5 முகக்கவசமாக வழங்க வேண்டும்.மேலும், சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், எப்படி ரூ.100 கொடுத்து கிருமிநாசினியை வாங்க முடியும். அதனால், தமிழக அரசு குறைந்தபட்சம் சோப்பையாவது வழங்க வேண்டும். 

குறுவைக்கு இந்த மாதம் ஜூலை 31 ஆம் தேதிக்குள் காப்பீட்டை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். கரோனா தொற்று என்பதாலும், தற்போதுதான் பயிர் நடைபெற்று வருகிறது. கூத்தாநல்லூர் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குறுவைக்கான பயிர் காப்பீடு செய்யப்படவில்லை. 

அதனால், விவசாயிகளின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், குறுவை பயிர் காப்பீடு செய்ய 15 நாள்கள் நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்கிட வேண்டும். ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டும், ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடியும் விவசாயம் செய்ய பயனில்லை. கிளைப் பாசன வாய்க்கால்கள் தூர்வாரி, சுத்தப்படுத்தாததால் ஆற்றுத் தண்ணீர் வர வாய்ப்பில்லை. கிளைப் பாசன வாய்க்கால்கள் தூர்வாரி, சுத்தப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் மீது அக்கறைக் கொண்டு, விவசாயத்திற்கு ஏற்றபடி மாவட்ட ஆட்சியர் செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com