மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: மின் வாரியம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்த ஜூலை 15-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்று தமிழ்நாடு மின் வாரியம் பதில் அளித்துள்ளது.
மின் கட்டணம் செலுத்த ஜூலை 15-க்கு மேல் நீட்டிக்க முடியாது
மின் கட்டணம் செலுத்த ஜூலை 15-க்கு மேல் நீட்டிக்க முடியாது

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 15 -ஆம் தேதிக்குள் என்ற காலக்கெடுவுக்குள் 75% நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்தி விட்டதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கமுடியாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ராஜசேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் மார்ச் 31-ஆம் தேதி வரை உபயோகப்படுத்தப்பட்ட மின் கட்டணத்தை மே 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் மின் கட்டணம் செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் மின்கட்டணம் செலுத்த வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் மக்களின் பணப்புழக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தைச் செலுத்த உத்தரவிட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜி.ராஜேஷ் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.  அவர்கள் போதுமான வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தரப்பில், முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கடந்த ஜூன் 15 - ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 
இந்த 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 15 -ஆம் தேதிக்குள் என்ற காலக்கெடுவுக்குள் 75 சதவீத நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்தி விட்டதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கமுடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருதரப்பு வாதங்களுக்காக விசாரணையை வரும் ஜூன் 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com