/

கரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: அன்புமணி

கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:05 pm

DIN

கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் கரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  28-ஆக உயர்ந்திருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதைத்  தொடர்ந்து மக்களிடம் ஒரு விதமான அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கவனத்துடனும், எச்சரிக்கையுடனும்  இருந்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்கலாம் என்பதால், இது குறித்த கவலை தேவையில்லை.

சீனாவிலும், பிற நாடுகளிலும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த 3,190 பேருமே ஏற்கனவே உடல் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாமல் இருந்தவர்கள் தான். எனவே, கரோனா பாதிப்பை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் மனிதர்கள் மூலம் பரவுகிறது என்பதால் சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்காது என்பதால், பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். புதிய மனிதர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவுக்கு முன்பும், பிறகும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுவதை அனைவரும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் தாக்குதல் குறித்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாலும், வதந்திகளாலும் தமிழக மக்களிடம் ஒரு வித அச்சம் நிலவுகிறது. கரோனா வைரசை தவிர்த்தல் மற்றும் நோய்த் தொற்றினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுவான மருத்துவ அறிவுரைகள் ஆகியவற்றை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அச்சத்தை போக்க வேண்டும். 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகளுக்காக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகளை அனைத்து பள்ளிகளும் முழுமையாக கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.