ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பேராசிரியர் அன்பழகன் மறைவு: கே.எஸ். அழகிரி இரங்கல்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 மார்ச் 2020, 5:16 am

DIN


சென்னை: திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் தலைமையை ஏற்று, 70 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்க கொள்கைகளை தமது உயிரினும் மேலாக கருதி, வாழ்நாள் முழுவதும் அதை நிறைவேற்றுவதற்கு கடுமையாக உழைத்த கொள்கைவாதி பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் தமது 97-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1977 முதல் 43 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்செயலாளராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தி.மு.க. அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு, நிதி, கல்வி போன்ற துறைகளை ஏற்று மிகச் சிறப்பாக பணியாற்றிய பெருந்தகையாளர் பேராசிரியர் அவர்கள்.

சிறுவயது முதல் தந்தை பெரியார், திரு.வி.க., போன்றவர்களின் எழுத்துக்களாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவர். தமது கருத்து வளம், நாவன்மை மூலம் மிக அற்புதமாக சொற்பொழிவு ஆற்றக்கூடிய பேராற்றல் மிக்கவர் பேராசிரியர். எவரிடமும் அன்பு காட்டி, இனிமையாக பழகக் கூடியவர். தமிழக அரசியலில் தலைவர் கலைஞரும், பேராசிரியரும் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள். இவர்களிடையே நிலவிய இணக்கமான உறவுகளைப் போல வேறு எந்த இயக்கத்திலும் முன்மாதிரியாக எவரும் இருந்ததில்லை. 

ஒருவரை ஒருவர் சரியான புரிதலோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகச் சிறப்பாக நடத்திய பெருமை இந்த இருபெரும் தலைவர்களுக்கு உண்டு. சோதனையான காலத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியதை எவரும் மறக்க முடியாது.

திராவிடர் கழகத்தில் இருந்த என் தந்தை மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த காரணத்தால், அதைப்போலவே என்னிடமும் மிகுந்த பாசத்தோடும், பரிவோடும் பழகிய பேராசிரியரின் இழப்பு என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூண் சாய்ந்து விட்டது. தி.மு.க.வின் சிகரமாக இருந்த பேராசிரியர் மறைந்து விட்டார். பேராசிரியரின் மறைவு என்பது தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தி.மு. கழகத்தின் முதுபெரும் தலைவர் பேராசிரியரின் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கட்சியினருக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.