மேட்டூர் அணைத் திறப்பை எதிர்நோக்கும் விவசாயிகள்
மேட்டூர் அணையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் இருப்பதால், ஜூன் 12-ம் தேதி அணையைத் திறக்க வேண்டும் என்ற


தஞ்சாவூர், மே 8: மேட்டூர் அணையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் இருப்பதால், ஜூன் 12-ம் தேதி அணையைத் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் டெல்டா விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
மேட்டூர் அணை 2011 ஆம் ஆண்டில் குறுவை பாசனத்துக்காக ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு, எட்டு ஆண்டுகளாகக் குறுவை பருவத்தில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு போதிய அளவுக்கு இல்லை. எனவே, 8 ஆண்டுகளுக்காகக் குறுவை பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து சம்பா பருவத்துக்காக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் திறந்துவிடப்பட்டாலும், அதுவும் காலம் கடந்த நிகழ்வாகவே அமைந்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்பருவத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.19 அடியாக இருக்கிறது. நீர் இருப்பு 65.08 டி.எம்.சி. உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்வதற்கு ஏறத்தாழ 70 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். தற்போது குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை உள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 40,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடி எதிர்பாக்கப்படுகிறது. மாவட்டத்தில் நிலத்தடி நீராதாரம் உள்ள இடங்களில் குறுவை சாகுபடி தொடங்கி, இதுவரை சுமார் 10,000 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. முன் பட்டத்தில் மட்டும் 25,000 ஹெக்டேரிலும், ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டால் மேலும் 15,000 ஹெக்டேரிலும் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல, நாகை மாவட்டத்தில் 37,000 ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 32,000 ஹெக்டேரிலும் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. இதில், இதுவரை நாகை மாவட்டத்தில் 1,300 ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 3,300 ஹெக்டேரிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டால் நாகை மாவட்டத்தில் மொத்தம் 52,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது என வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், குறுவை சாகுபடிக்குத் தேவையான நாற்றங்கால் தயாரிக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே, மேட்டூர் அணை திறப்பு குறித்த தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். இத்தேதியை அறிவித்தால்தான் திட்டமிட்டுப் பணியைத் தொடங்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழுவைச் சேர்ந்த பி. கலைவாணன் தெரிவித்தது: மேட்டூர் அணையை ஆகஸ்ட் மாதங்களில் திறந்துவிடப்பட்ட ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சுமார் 75,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இதைப் பயன்படுத்தி, இப்பகுதி வயலுக்கு மேட்டூர் அணை நீர் வந்தடைவதற்கு முன்பாகவே ஆழ்குழாய் நீர் மூலம், மே மாதத்திலேயே நாற்று விட்டு, நட்டு விடவேண்டும். இதன் மூலம், அணை நீரில் 14 டி.எம்.சி. சேமிக்கப்பட்டு 48.60 டி.எம்.சி. நீரைக் கொண்டு குறுவை சாகுபடியை முடிக்க முடியும். எனவே, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தால் குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமையும் என்றார் கலைவாணன்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடிக்கு சேர்த்து மொத்தம் 270 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழகத்துக்கு ஜூன் முதல் ஜனவரி வரை 167.25 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால், கர்நாடக அணைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டால்தான், தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்கிறது என்பது கடந்த கால உண்மை. மேட்டூர் அணையில் தற்போதுள்ள 65 டி.எம்.சி.-ல் குறுவை சாகுபடிக்கு சுமார் 50 டி.எம்.சி. திறந்துவிடப்பட்டாலும், சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் தேவைப்படும். நிகழாண்டு தென் மேற்கு பருவ காலத்தில் இயல்பான அளவுக்குக் குறையாமல் மழை கிடைக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முதல் கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அதேசமயம், தமிழகத்துக்கான தண்ணீரையும் நாம் பெற்றால்தான் நிகழாண்டு குறுவை மட்டுமல்ல; சம்பா சாகுபடிக்கும் சாதகமாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...