மருத்துவக் கழிவுகள் அழிக்கப்படும் விவரங்களை வெளியிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

​ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read


ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கரோனா நோய்த் தொற்றைத்  தடுப்பதில், தொடக்கம் முதலே அலட்சியத்தையும் சுணக்கத்தையும் காட்டிவரும் எடப்பாடி பழனிசாமி அரசின் தொய்வான நடவடிக்கைகளால், மேலும் மேலும் நோய்த் தொற்றுப் பரவல் ஏற்பட்டு, பாதிப்புக்கான சூழல்கள் அதிகரிப்பதுடன், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிர்காக்கும் மருத்துவத் துறையினரையும், மன உளைச்சலுக்கு ஆளாக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மருத்துவர்களும் செவிலியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் 395 நோயாளிகளுக்கு ஒரு ஷிஃப்ட்டில் 26 செவிலியர்கள் மட்டுமே பணிபுரியும் சூழலின் காரணமா, அதிக வேலைப்பளுவினை சுமக்கும் கட்டாயத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். அதுமட்டுமின்றி, இரவு பகல் பார்க்காமல் தொடர்ச்சியாகப் பணியாற்றும் செவிலியர்கள் குடியிருக்கும் வாடகை வீடுகளிலும் சிக்கல்கள் எழுகின்றன. அதனால் குடும்பத்தினரைப் பிரிந்து, மருத்துவமனையிலேயே தனித்திருக்க வேண்டிய நெருக்கடியும் உருவாகியுள்ளது.

செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்டகாலமாகப் போராடி வரும் நிலையில், இந்தப் பேரிடர் காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகளைக்கூடக் கண்டுகொள்ளாமல் அரசு புறக்கணிப்பது, சிறிதும் மனிதாபிமானமற்ற செயலாகும். தொகுப்பூதிய முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள செவிலியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற அவர்களின் நீண்டகாலக்  கோரிக்கையை இந்த நேரத்திலாவது கவனித்து விரைந்து நிறைவேற்றி, அவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.

60 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடிக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட சுயப் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kit), முகக்கவசங்கள், கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், கரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஆர்.டி.பி.சி.ஆர். கிட் (rtPCR Kit ) உள்ளிட்டவை மருத்துவக் கழிவுகளாக (Medical Waste) மாறியுள்ளன.

இவற்றைக் கண்காணித்து, உரிய முன்னெச்சரிக்கை முறைகளைக் கையாண்டு, அப்புறப்படுத்தி, அவற்றை அழித்து, நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வேண்டிய முக்கியமான பணி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உரியது. வாரியம் சார்பில் 11 நிறுவனங்கள் ‘அவுட் சோர்ஸ்' முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 3 மட்டுமே முறையான நிறுவனங்கள் என்றும், எஞ்சியவை ஆளுங்கட்சியினரின் பினாமி நிறுவனங்கள் என்றும் அறியப்படும் நிலையில், இதுநாள்வரை கரோனா  மருத்துவக் கழிவுகளை அகற்றுவது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நோய்த் தொற்று அபாயம் உள்ள மருத்துவக் கழிவுகளை, முறையாக மூடப்பட்ட குப்பை வண்டிகளில் எடுத்துச் சென்று, பாதுகாப்பாகவும் - உரிய முறையிலும் ‘Incinerator’ கொண்டு எரிக்க வேண்டும். ஆனால், மூடப்படாத குப்பை வண்டிகளில் கழிவுகளை அப்படியே அள்ளிப்போட்டு, சென்னையைச் சுற்றியுள்ள வழக்கமான குப்பை கொட்டும் இடங்களில் (Dumping Yard) குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்தான செயல் நடைபெறுகிறது.

திறந்த நிலையில் அள்ளிச் செல்லும்போது, சிவப்பு மண்டலமான சென்னையில் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு அதுவே காரணமாக அமைந்துவிடும். குப்பைகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கும் போதிய அளவில் கவசங்கள் வழங்கப்படாததால், அவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறி, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி, தூய்மைப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடுகளால் அனைத்துத் தரப்பினரும் அச்சத்திலும் பீதியிலும் உறைந்துள்ளனர்.

'குப்பை கொட்டக்கூட லாயக்கில்லாத அரசு' என்ற குற்றச்சாட்டையாவது  குறைந்தபட்சம் மாற்றி; பாதுகாப்பான முறையில் எச்சரிக்கையாகக் குப்பைகளை அகற்றவும், ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடவும் உடனடியாக ஆவன செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com