தமிழக பொதுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக பொதுத் துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தலைமைச் செயலகம்
தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக பொதுத் துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால் தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 2019-20 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

கோவிட் 19 தொற்றின் தாக்கம் உலகெங்கிலும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களாலும்  உணரப்பட்டுள்ளது.  நோய்த்தொற்றின் தாக்கத்தினை குறைக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தபட்டதால் மாநில பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டபடியான வாரியங்கள் உள்ளடங்கிய அனைத்து வணிக நிறுவனங்களின் செயல்பாட்டை பாதித்துள்ளது. குறிப்பாக தொழிலாளர் முக்கியத்துவம் வாய்ந்த அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் மற்றும் பல நிறுவனங்கள் பாதிக்கபட்டுள்ளன.

கடந்த ஆறு மாதங்களில் பொது போக்குவரத்து இயங்காததாலும், தொழிற்சாலைகள் முழு அளவில் செயல்படாததாலும் மேற்குறித்த நிறுவனங்களின் இயக்க வருமானம் மிகவும் குறைந்து விட்டது. இருந்த போதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டு  வருகிறது.  இலாபம் ஈட்டும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் போனஸ் வழங்க தேவையான ஒதுக்கக்கூடிய உபரி தொகை இருந்த போதிலும், மேற்குறித்த சவால்களையே எதிர்கொண்டுள்ளது. 

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-இன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- என உயர்த்தப்பட்டுள்ளது.  இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2019-20ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு  வழங்கப்படும்.

இலாபம் ஈட்டியுள்ள/நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். 

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400/- பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com