முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸில் இணைந்தார்
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் அண்மையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிகளில் இணைவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். உடன் கட்சியின் செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சசிகாந்த் 2009ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கர்நாடகத்தில் துணை ஆட்சியர் மற்றும் ஆட்சியராகப் பணியாற்றி மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். தக்ஷின கன்னட மாவட்ட துணை ஆணையராகப் பணியாற்றி வந்த அவர், மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.