
சேலம்: அதிமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதைத் தவிர்த்துவிட்டு, ஆக்கபூர்வமான கருத்துகளை மக்களுக்குத் தெரிவித்து எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கலாம் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சேலத்தை அடுத்த வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் நீரேற்று முறை மூலம் ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 100 வறண்ட ஏரிகளைப் புனரமைத்து மேம்படுத்தும் பணிகள், 44 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூ. 46.39 கோடியில் 6,832 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி அவர் பேசியது:
நிகழாண்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 32 சதவீதமாக இருந்த உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை 2020-இல் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவக் கல்வியில் சாதனை: ஒரே நேரத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிய சரித்திர சாதனையை தமிழகம் படைத்திருக்கிறது. இதன்மூலம் 2021-22-இல் கூடுதலாக 1,650 மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த 2011-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 3,600 மாணவர்கள் கூடுதலாக மருத்துவக் கல்வி படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளோம்.
நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த சட்டப் போராட்டம் நடத்தி வந்தோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தவிர்க்க முடியாத சூழலில் நீட் தேர்வை நடத்தி வருகிறோம். அதேசமயம், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு உருவாக்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசுப் பள்ளிகளில் படித்த 21 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
பல்வேறு துறைகளில் சாதனை: நீர் மேலாண்மைத் திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் விருது பெற்றுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகள் 100 சதவீதம் நடைபெற்று வருகின்றன; தொழிற்சாலைகளும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.
தமிழக அரசின் முறையான நடவடிக்கையால்தான் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் சூழலிலும் தமிழகத்தில் குறைந்து கொண்டிருக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதமாக இருக்கிறது. தமிழகம்தான் கல்வி, சுகாதாரம், வேளாண் துறைகளில் முதலிடம் பிடித்து வருகிறது.
அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு சாதனை படைத்து வருகிறது. இதனைப் பொறுக்க முடியாமல் திட்டமிட்டு நாள்தோறும் பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வருகிறார். கரோனா சூழலிலும் தமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தேன்.
அரசின் மீது வீண் பழி சுமத்துவது, அமைச்சர்கள் மீது பொய்யான, அவதூறான செய்திகளை வெளியிடுவதை மு.க.ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான கருத்துகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் மூலமாக எதிர்க்கட்சி வரிசையிலாவது அவர் அமர முயற்சி செய்யலாம் என்றார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், எம்.எல்.ஏ-க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.