இதன் மூலம் மொத்தம் 2416.05 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் மூலம் 2,47,518 விவசாயிகள்பயனடைந்துள்ளனர். முதல்வரின் உத்தரவின்படி, இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி அன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டதாலும், பருவ மழை நல்ல முறையில் பெய்ததாலும், தேவையான இடுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குக் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாலும், கடைமடை வரை மழைக்காலத்திற்கு முன்பே வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாலும், தமிழ்நாடெங்கும் விவசாயிகளால் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, நெல் விளைச்சல் அமோகமாக உயர்ந்துள்ளது. குறுவை பருவத்திற்கான நெல்லை கொள்முதல் செய்ய, அறுவடை கால தொடக்கத்திலேயே, அதாவது 1.10.2020 அன்றே, 591 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணி துவங்கப்பட்டது. மேலும், அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாளது தேதி வரையில் 816 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 4.10.2020 மற்றும் 11.10.2020 ஆகிய இரண்டு ஞாயிறு விடுமுறை நாட்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி நடைபெற்றது.