பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் திருநள்ளாறு கோவிலுக்கு பக்தர்கள் வரத்து அதிகரிப்பு 

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துகள் தொடங்கப்பட்ட நிலையில், பேருந்து மற்றும் பிற வாகனங்களில் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலுக்கு சனிக்கிழமை அதிகமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
Published on
Updated on
1 min read

காரைக்கால்:  தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துகள் தொடங்கப்பட்ட நிலையில், பேருந்து மற்றும் பிற வாகனங்களில் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலுக்கு சனிக்கிழமை அதிகமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

பொது முடக்கத்தால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன்  8-ஆம் தேதி முதல் இவற்றை திறந்து பக்தர்களை அனுமதிக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.

காரைக்கால் மாவட்டத்தில், திரளான பக்தர்களை ஈர்க்கும் வகையில் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம், கர்நாடகத்திலிருந்து வழக்கமாக சனிக்கிழமையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வார்கள். 

பொது முடக்கம் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் காரைக்காலுக்குள் நுழைவதில் கடும் கட்டுப்பாடுகள், பேருந்து போக்குவரத்தின்மை நீடிப்பு இருந்ததால், திருநள்ளாறு கோவிலுக்கு பக்தர்கள் வரத்து வெகுவாக குறைந்துகாணப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் இக்கோயில், தினமும் 100 எண்ணிக்கையிலும், சனிக்கிழமையில் மட்டும் அதிகப்பட்சமாக 250 பேரும் என்ற நிலை இருந்தது. 

புதுச்சேரி மாநிலத்தில் இ-பாஸ் வழங்கல் ரத்து செய்து ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிப்பு செய்ததையொட்டி கடந்த 29-ஆம் தேதி சனிக்கிழமை பக்தர்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. எனினும் பகல் வேளையில் சுமார் 500 பேர் வரை மட்டுமே தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துகள் தொடங்கிவிட்ட நிலையில், நிகழ்வாரம் சனிக்கிழமை பேருந்துகள் மூலமாகவும், கார், வேன்கள் மூலமாகவும் திருநள்ளாறு கோவிலுக்கு அதிகாலை முதல் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

பகல் 11 மணி வரை சுமார் 2 ஆயிரம் பேர் தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. கடந்த 5 மாதங்களுக்குப் பின் பக்தர்கள் மிகுதியாக வந்தது நிகழ்வாரம்தான் என அவர்கள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் கோவில் பகுதியில் இருந்துகொண்டு, பக்தர்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் கோவிலுக்குச் செல்லவும் அறிவுறுத்தினர். கோயில் ஊழியர்கள் இவர்களை முறைப்படுத்தி கோயிலுக்குள் அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com