/

விவசாயிகள் நிதியுதவி முறைகேட்டைக் கண்டறிந்தது அதிமுக அரசுதான்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடுகளுக்கு மத்திய அரசின் புதிய வழிமுறைதான் காரணம்;

News image
திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவியை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

DIN

திருவண்ணாமலை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடுகளுக்கு மத்திய அரசின் புதிய வழிமுறைதான் காரணம்; இந்த முறைகேட்டை அதிமுக அரசுதான் முதலில் கண்டறிந்தது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்யவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 87 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

நதிநீர்ப் பிரச்னை: மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர்ப் பிரச்னை குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வராதபடி கர்நாடகம் தடுப்பணை கட்டி தடுத்தால் நீதிமன்றம் செல்வோம். இந்த விஷயத்தில் நமது உரிமையை எப்போதும் விட்டுத் தரமாட்டோம்.

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நடைபெற்ற முறைகேட்டை அதிமுக அரசுதான் கண்டறிந்தது. இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 41 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற்று வந்தனர். கடந்த 4 மாதங்களில் இது 46 லட்சமாக உயர்ந்தது. குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் எப்படிப் பயன்பெற முடியும் என்ற சந்தேகம் மாநில வேளாண் துறைக்கு ஏற்பட்டதால், உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில், முறைகேடு நடைபெற்றது தெரிய வந்தது. முறைகேடு நடைபெற்ற இடங்களில் ஆய்வு செய்து பணத்தைத் திரும்பப் பெற்று வருகிறோம்.

கடந்த ஆண்டு இறுதியில் ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டையைக் கொண்டு விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்ததால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. இதில் தொடர்புடைய 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். 81 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 34 துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தவறான தகவல்: தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் குறித்த எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது தவறான தகவல்.

சட்டப்பேரவையில் 2019}20 காவல் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட புத்தகத்தில் 159}வது பக்கத்தில் அட்டவணைப்படுத்தி உள்ளோம். இதில் ஆதாயக் கொலைகள் 81, கொடுங்குற்றங்கள் என 1,488 கொலைச் சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விரண்டையும் கூட்டினால் கொலைகளின் மொத்த எண்ணிக்கை 1,569 மட்டுமே.

இதைப் படித்துப் பாக்காமலேயே 81 கொலைகளை மறைத்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெற்ற, தற்போது மூடப்பட்டுள்ள டான்காப் ஆலையை உணவுப் பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

8 வழிச் சாலைத் திட்டத்தால் பலன் கிடைக்கும்:

சேலம்}சென்னை இடையிலான 8 வழிச் சாலைத் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். தமிழக அரசின் திட்டம் கிடையாது. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2001}இல் இருந்த வாகனப் போக்குவரத்து தற்போது சுமார் 350 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, சாலை வசதியை விரிவுபடுத்த வேண்டும் என்று பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நிலம் கையகப்படுத்திக் கொடுப்பது மட்டுமே தமிழக அரசின் பணி. தொழிற்சாலைகள் அதிகமாகத் தொடங்கப்பட வேண்டும் என்றால் உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.

சென்னையிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் வழியாகச் செல்லும் இந்தச் சாலையால் இந்த மாவட்ட மக்கள் பயன்பெறுவர். திமுக ஆட்சியிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 794 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா? இப்போதுதான் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இங்கு கனரக வாகனங்கள் தடையின்றி செல்ல வேண்டுமென்பதால்தான் 8 வழிச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தும் என்றார் முதல்வர்.

"பெற்றோர் மனநிலையை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும்'

விழுப்புரம், செப். 9: தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களின் மனநிலையை அறிந்து, அரசுத் தரப்பில் ஆராய்ந்த பிறகே முடிவு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதுதான் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி.

"நீட்' தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. "நீட்' தேர்வை தவிர்ப்பதற்கு, நீதிமன்றம் வரை சென்று முயற்சித்தும் பலனளிக்கவில்லை. எனினும், "நீட்' தேர்வு தேவையில்லை என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான தேர்ச்சி குறித்து, அரசு ஏற்கெனவே தெளிவாகச் சொல்லிவிட்டது. அதில் குழப்பம் தேவையில்லை. பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களின் மனநிலையை அறிந்து, அவர்களது கருத்துகளைக் கேட்டு, அரசுத் தரப்பில் நன்கு ஆராய்ந்தே பிறகே முடிவு செய்யப்படும் என்றார் முதல்வர்.

பேட்டியின்போது, மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.