ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின்.

தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியான 47,272 கோடி ரூபாயை மத்திய அரசு வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டது” என்று தலைமைக் கணக்கு ஆய்வு அலுவலரின் (சி.ஏ.ஜி) அறிக்கை சுட்டிக்காட்டிய பிறகும், தமிழ்நாட்டிற்கு இதுதொடர்பாக இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் அடங்கி அமைதி காத்துக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு எடுத்துச் செலவு செய்த “ஜி.எஸ்.டி ஈடு செய்யும் நிதியில்” தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையும் இருக்கிறது. 2017-18-ஆம் ஆண்டில் மட்டும் 4321 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இருக்கிறது. ஆனால் இந்த சி.ஏ.ஜி அறிக்கை குறித்து இன்றுவரை முதல்வர் பழனிசாமி திருவாய் மலர்ந்து கருத்து ஏதும் கூறவும் இல்லை; மாநில நிதியை எடுத்தது தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்து, வழக்கம் போல நிதியமைச்சருக்கு ஒரு கடிதம் கூட எழுத முன்வரவில்லை.

“ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன்” என்று அடிக்கடி டெல்லி சென்று வருபவரும், அ.தி.மு.க.வின் “சூப்பர் ஸ்போக்ஸ்மேனும்” ஆன அமைச்சர் ஜெயக்குமாரும் இது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. தங்களின் ஊழல் வழக்குகளில் - வருமான வரித்துறை, சி.பி.ஐ. வளையத்திற்குள் மாட்டிக் கொண்டு விழிக்கும் நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்ற படபடப்புடன் முதல்வர் பழனிசாமி, மாநிலத்தின் உரிமைகளை இப்படி அடமானம் வைப்பது, அவர் வகிக்கும் பதவிக்குச் சற்றும்  பொருத்தமானதல்ல!

தமிழக முதல்வர்கள் வரலாற்றில்; நெஞ்சை நிமிர்த்தி, தட்டிக் கேட்க வேண்டிய உரிமைகள் உள்ள காரியங்களில் கூட, அதை ஏனோ தவிர்த்துவிட்டு, “முதுகெலும்பு இல்லாமல் இப்படியும் ஒரு முதல்வர், நெளிந்து வளைந்து கொண்டு இருந்தார்” என்று நாளைய தலைமுறை இழித்துப் பழித்துப் பேசும் அளவிற்கு, பழனிசாமி நடந்து கொள்ளாமல், இப்போதாவது உடனடியாக மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். இது மத்திய பா.ஜ.க. அரசுக்குச் செய்யும் சலுகை அல்ல; மாநிலத்தின் நலனுக்காக நிலை நாட்ட வேண்டிய உரிமை! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com