இந்தச் சூழலில்- நாட்டில் உள்ள விவசாயிகளும் - தமிழக விவசாயிகளும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எண்ணிக் கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கொச்சைப்படுத்துகின்ற வகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளுக்கு நன்மை தருவதே தவிர அவற்றால் எவ்விதப் பாதிப்பும் இல்லை” என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றைய தினம் தனது துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியுடன் அமர்ந்து அளித்துள்ள பேட்டிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முதலமைச்சர் பழனிசாமி ஆதரவளிக்கச் சொன்ன விவசாயிகள் விரோத மசோதாவை ஆதரித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தம்“டெல்டா” மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சருக்கும், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் ஏற்பட்டிருப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது.