பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரம்; கடலூரில் அதீத கனமழை தொடரும்

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதாகவும், கடலூர், நாகை, ராமநாதபுரத்தில் அதீத கனமழை தொடரக் கூடும்

News image

தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

Updated On :4 டிசம்பர் 2020, 10:27 am


சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதாகவும், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரத்தில் அதீத கனமழை தொடரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ். பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது, மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது  இன்று மாலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகரக் கூடும். இது மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியதாக மாறி மெதுவாக நாளை மாலை மேற்கு தென்மேற்காக நகர்ந்து கேரள பகுதியை அடையக் கூடும்.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ. மழையும், சிதம்பரத்தில் 34 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவைப் பார்க்கும் போது, தமிழகத்தில்  11 இடங்களில் அதி கனமழையும், 20 இடங்களில் மிகக் கனமழையும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை பெய்ய வேண்டிய இயல்பான மழையின் அளவு 373 செ.மீ. ஆகும். ஆனால், இதே காலக்கட்டத்தில் தற்போது வரை பெய்துள்ள மழையின் அளவு 364 செ.மீ. ஆகும். இது இயல்வை விட 2 சதவீதம் குறைவு. 

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் இயல்பு அளவை விட  16 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது. ஆனால், இன்று இது 2 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனவே, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகம் மற்றும் புதுவைக்கு 14 சதவீத மழை கிடைத்துள்ளது.

ராமநாதபுரத்தில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு பரவலாக மழை பெய்யக் கூடும். 

கனமழையைப் பொறுத்தவரை கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழையும், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், வேலூர் ஆகிய உள் மாவட்டங்களிலும்,  வட மாவட்டங்களான செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரத்தில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து வருவதால் தொடர்ந்து சென்னைக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. காற்று வீசும் திசையின் அடிப்படையில், ராமநாதபுரத்திலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருவதால், தற்போதைய நிலவரப்படி மழை தொடரும். சென்னையின் ஒரு சில இடங்களில் கன மழையாக இருக்கக் கூடும்.

மீனவர்களைப் பொறுத்தவரை.. மன்னார்வளைகுடா - தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். எனவே, மீனவர்கள் நாளை காலை வரை இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.