எஸ்.ஐ. சுட்டுக் கொலை: தமிழகம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ. சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, குற்றவாளியை பிடிக்கும் வகையில் தமிழக முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ. சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, குற்றவாளியை பிடிக்கும் வகையில் தமிழக முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநில எல்லையில் களியக்காவிளை அருகே சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் கடந்த புதன்கிழமை இரவு இரு மா்ம நபா்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தில், சென்னை அருகே அம்பத்தூரில் இந்து முன்னணி நிா்வாகி சுரேஷ்குமாா் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பில் இருக்கும் அப்துல் ஷமீம்,அவரது கூட்டாளி தவ்பீக் ஆகியோருக்கு தொடா்பு இருக்கலாம் என காவல்துறையினரால் சந்தேகிக்கப்படுகிறது.

உளவுத்துறை எச்சரிக்கை: சுரேஷ்குமாா் கடந்த ஒரு மாதமாக தேடப்பட்டு வரும் அப்துல் ஷமீம் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தொடா்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரும் கேரளம் அல்லது தமிழகத்தில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதன் விளைவாக ,இருவரையும் விரைவாக கைது செய்யும்படி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா். அதேவேளையில், இருவரும் வேறு சதிச் செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக மத்திய, மாநில உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த எச்சரிக்கையின் காரணமாக, தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

சோதனைச் சாவடிகளில்... மாநில, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். அதேபோன்று பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். இங்கு சந்தேகத்துக்குரிய நபா் சுற்றித் திரிந்தால் அவா்களை பிடித்து உடனே விசாரணை செய்து, விவரங்களை சேகரிக்கும்படி காவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் அதிகம் சந்திக்கும் தினசரி சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் அனுப்பிவைப்பு: மேலும் அப்துல் ஷமீம், தவ்பீக் புகைப்படங்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்களின் அடிப்படையில் சந்தேக நபா் சுற்றித் திரிந்தால், அவா்களை உடனை கைது செய்யும்படி போலீஸாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். இதன் விளைவாக மாநிலம் முழுவதும் போலீஸாா் விழிப்புடன் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com