
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தனது வாகனத்தை முற்றுகையிட்டு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்துக்கு தேனி எம்.பி. ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பத்தில், மறைந்த முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினையொட்டி நேற்று இரவு (23-01-2020) நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார் சென்ற போது, கம்பம் பகுதியில் ஒரு சில உள்ளூர் இஸ்லாமிய அமைப்புகளால் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.
அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் காரைச் சுற்றி வளைத்து, அவரை தாக்க முயன்றனர். குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக கட்சிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இது தேவையற்ற பதற்றத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
அமைதியான தேனி மாவட்டத்தில் அமைதியின்மையை உருவாக்கி, வன்முறையைத் தூண்டுவதற்காக மேற்கண்ட நபர்களால் மேற்கொள்ளப்பட்ட முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முயற்சிக்கும் மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய எதிர்மறையான பிரசாரத்திற்கும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தனது கடுமையாக கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இத்தகைய தவறான பிரசாரம் செய்பவர்களின் வலையில் மக்கள் விழுந்துவிட வேண்டாம் எனவும் ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...