சென்னையில் நாள்தோறும் 4,000 பேருக்கு கரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி

சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, பல முக்கிய விஷயங்கள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் பழனிசாமி.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் கரோனா தொற்று உள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சென்னைதான் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சென்னைக்குள் வருவோர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அரசின் வழிகாட்டுதலை சென்னை மக்கள் பின்பற்றியிருந்தால் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் கரோனா அதிகம் தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவிலேயே கரோனா தொற்று பாதித்து குணடைந்தவர்களில் தமிழகத்தில்தான் அதிகம்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சிறப்பான பணியால் கரோனா நோயாளிகள் 56% பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com