தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்: அமித் ஷா

தமிழகத்தில் நடந்து வரும் பாறை போன்ற இந்த ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்: அமித் ஷா

தமிழகத்தில் நடந்து வரும் பாறை போன்ற இந்த ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரூ.61,843 கோடியில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்துக்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

சென்னைக்குக் குடிநீா் வழங்கும் வகையில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய நீா்த்தேக்கத்தை அமித் ஷா இன்று தொடக்கி வைத்தார்.

பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்து பேசிய அமித் ஷா, உலகிலேயே மிகத் தொன்மையான மொழியான தமிழில் உரையாற்ற எனக்கும் ஆசைதான். ஆனால், எனக்கு தமிழ் தெரியாது, அதனால் தமிழில் உரையாற்ற முடியாதது வருத்தமளிக்கிறது. தமிழில் பேச முடியாததற்கு முதலில் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்று அமித் ஷா தனது உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. கரோனாவிலிருந்து குணமடைவோரின் தேசிய விகிதத்தை விட தமிழகத்தில் குணமடைவோரின் விகிதம் அதிகம்.  தமிழக முதல்வர், துணை முதல்வரின் நிர்வாகத்தின் கீழ், தமிழகம் கரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. கரோனாவை எதிர்த்து அரசுகள் மட்டும் போராடவில்லை. 130 கோடி இந்தியர்களும் போராடி வருகிறார்கள்.

உடல் நலக் குறியீட்டில் மாவட்டங்கள் இடையே தமிழகத்தின் வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. கரோனா தடுப்பு மட்டுமல்ல நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.

அனைவருக்கும் 2022-ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி என்ற திட்டமும் நிறைவேறும் என நம்புகிறேன் என்று அமித் ஷா கூறினார்.

தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.4,400 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  விவசாயிகள் நலனுக்காக மோடி அரசு மூன்று விதமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. மோடி அரசின் இந்த முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு அளித்தது.

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை 2024-ஆம் ஆண்டுக்குள் உறுதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழகம் வந்திருப்பதால் அரசியல் பற்றியும் பேச விரும்புகிறேன். திமுக தலைவர்கள் அவ்வப்போது, மத்திய அரசு தமிழகத்துக்கு அநீதி இழைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். தமிழகத்துக்கு நாங்கள் செய்தவற்றை பட்டியலிடத் தயார். அதுபற்றி திமுக விவாதிக்கத் தயாரா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார். 

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் இடம்பெற்றிருந்த திமுக, அந்த பத்தாண்டுகளில் தமிழகத்துக்கு செய்தவற்றை பட்டியலிடுங்கள். வாரிசு அரசியலை பாஜக படிப்படியாக ஒழித்து வந்துள்ளது. தமிழகத்திலும் அதை செய்வோம்.  

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.16,155 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது தமிழகத்துக்கு ரூ.32,750 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை உள்ளது? ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பு, ஒரு முறை உங்கள் குடும்பத்தை முதலில் திரும்பிப் பாருங்கள் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com