பல கிலோ மீட்டர் தொலைவில் தீவிர நிவர் புயல்; வெள்ளக்காடாக சென்னை

சென்னையிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் தீவிர நிவர் புயலானது மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
பல கிலோ மீட்டர் தொலைவில் தீவிர நிவர் புயல்; வெள்ளக்காடாக சென்னை
பல கிலோ மீட்டர் தொலைவில் தீவிர நிவர் புயல்; வெள்ளக்காடாக சென்னை


சென்னை: சென்னையிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் தீவிர நிவர் புயலானது மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர நிவர் புயல், ஆறு மணி நேரமாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் நண்பகலில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 250 கி.மீ. வேகத்திலும் சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 

இந்தப் புயலானது இன்று நள்ளிரவு முதல் கரையைக் கடக்கத் தொடங்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை நகரின் முக்கியப் பகுதிகள் பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சென்னையின் முக்கியப் பகுதிகளான எழும்பூர், பாரிமுனை, கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, வட சென்னையில் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்களும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே, மழை பெய்தாலே வெள்ளம் என்ற அளவுக்கு பெயர்போன வேளச்சேரியில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளது. மிகவும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அதன் கரையோரப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் நகர், கே.கே. நகர் உள்ளிட்டப் பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளும் தீவிரமாகவே செய்யப்பட்டு வருகிறது. ஆர்கே. நகர், கொருக்குப்பேட்டை பகுதிகளில் மழைநீருடன், கழிவு நீரும் கலந்துவிட்டதால் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் அருகே
கீழ்ப்பாக்கம் அருகே

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான சிட்லப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் மற்றும் ஏரியைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் கடும் வெள்ளமும், பரவலாக லேசான வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பரவலாக 100 மி.மீ. மழை பதிவானது. நுங்கம்பாக்கத்தில் 106.5 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 78 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது.

பல கிலோ மீட்டர் தொலைவில் தீவிர நிவர் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில், அதனை எதிர்கொள்ளப்போகும் சென்னையோ ஏற்கனவே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.


தீவிர நிவர் புயலானது, அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும். இது வடமேற்காக நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி இடையே காரைக்கால் - மகாபலிபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழையும், ஓரிரு பகுதிகளில் அதிதீவிர கனமழையும் பெய்யக் கூடும்.

அதேவேளையில், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிவர் அதி தீவிரப் புயலானது கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 - 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சிலவேளைகளில் மணிக்கு 145 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com