திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக உரிமைகள் மீட்கப்படும்: மு.க.ஸ்டாலின்
ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் எம்.பிரபாகரன், அரியலூர் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே திமுக வேட்பாளர்கள் குன்னம் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் எம்.பிரபாகரன், அரியலூர் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.
அவர் மேலும் பேசியது:
அரியலூர் மாவட்டத்துக்கு வரும் போதெல்லாம், கல்விக்காக தன்னுயிரை மாய்ந்துகொண்ட மாணவி அனிதாவின் நினைவு தான் ஞாபகத்துக்கு வருகிறது. அவரது பெயரில் சென்னை கொளத்தூரில் பயிற்சி மையம் தொடங்கி 1,000 பேருக்கு வேலை வழங்கியுள்ளேன்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளைக் கொண்டு வந்து தமிழ் சமூக மாணவ, மாணவிகளை முடக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. கொளத்தூரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அனிதா பெயரில் பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். தமிழை அளிக்கவே ஹிந்தியை தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

தற்போது அனைத்து ஊடகங்களிலும், திமுக தான் அதிக இடங்களைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளும் கட்சியினர் அரசு கேபிளில் கருத்து கணிப்பு வெளியிடும் சேனல்கள் துண்டிக்கப்படுகிறது.
எனது மகள் வீட்டில் சோதனை நடத்தி எங்களை மிரட்டி வீட்டில் படுக்கவைத்து விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதற்கெல்லாம் அதிமுக பயப்படுமே தவிர அதிமுக ஒரு காலமும் பயப்படாது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீத ஒதுக்கீடாக உயர்த்தியது, பல சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீட்டை வழங்கியது, வன்னியர் உட்பட 107 ஜாதி மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனச் சட்டம் கொண்டு வந்தது இவைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கருணாநிதி எவ்வாறு அனைத்து மக்களுக்கும் இடக்கீடு வழங்கினாரோ அதே போல் அவரது மகனான ஸ்டாலின் ஆகிய நானும் அவரது வழியைப் பின்பற்றுவேன்.

இந்த தேர்தலில் ஒரு அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அவர் பாஜக எம்எல்ஏவாக மாறிவிடுவார். குறிப்பாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் தற்போது, பாஜக எம்.பியாக செயல்படுகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தாராபுரத்தில் பேசிய பிரதமர் மோடி, தற்போது அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை அறியாமல் பேசுகிறாரா. உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆளுவது பாஜக, அங்கு ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அது மோடிக்கு தெரியாத என்ன? திமுக ஆட்சியில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

வேளாண்மை பொருத்தமட்டில், புதிய வேளாண் சட்டங்களை திமுக, காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்த நிலையில், அதிமுக ஆதரித்து வாக்களித்தது. கேரளாவில், பஞ்சாப்பில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தற்போது, தேர்தல் வந்துள்ளதால், அதனை ஆதரிக்க மாட்டோம் என பழனிசாமி சொல்கிறார்.
திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை முதல்வர் பழனிசாமி நிறைவேற்றினார். அதை நினைத்தால், ரஜினி ஒரு படத்தில் சொல்வார் ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்கிறான் என்ற கதைதான் ஞாபகம் வருகிறது.
1957 ஆம் ஆண்டு முதன் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக. அன்று முதல் இன்று வரை திமுக தனது தேர்தல் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டு, அதனை நிறைவேற்றி வருகிறது என்றார். அது போல இந்த தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
எனவே திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகம் இழந்த உரிமைகள் அனைத்தும் மீட்கப்படும். சுயமரியாதை காக்கப்படும்.புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். மீண்டும் உழவர் சந்தை திறக்கப்படும். பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். ஜயங்கொண்டத்தில் முந்திரி, காகித தொழிற்சாலைகள், அரியலூர் பேருந்து நிலையம் நவீனப்படுத்தப்படும். செந்துறையில் முந்திரிசாறு தொழிற்சாலை அமைக்கப்படும். கொள்ளிடம் குடிநீர் திட்டம் ஜயங்கொணடத்துக்கு கொண்டுவரப்படும்.
செந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும், திருமானூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட 7 இடங்களில் கொள்ளிடத்தில் தடுப்பணை. திருமானூரில் அரசு மகளிர் கலைக்கல்லூரி தொடங்கப்படும். பெரம்பலூர், லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடை திட்டம். பெரம்பலூரில் வெங்காய பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...