ரமலான் நோன்பு ஆரம்பம்: வீடுகளில் நோன்பு திறக்க  ஜமாத் கமிட்டி வேண்டுகோள்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடங்கியது.
ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை
ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடங்கியது. வீடுகளில் அவரவர் நோன்பு திறந்து கொள்ளுங்கள் எனவும், சமூக இடைவெளி விட்டு தொழுகை நடத்தவும் ஜமாத் கமிட்டியினர் முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் வாவேர் பள்ளிவாசல், மஸ்ஜிதே இலாஹி புதுப்பள்ளிவாசல், கம்பமெட்டு காலனி பள்ளி, மைதீன் ஆண்டவர் பள்ளி, டவுன் பள்ளி, அஸிஸியா பள்ளி, பேருந்து நிலைய பள்ளி என ஏழு பள்ளிவாசல்கள் உள்ளன. இதேபோல் கூடலூரில் பெரிய பள்ளிவாசல் உள்ளது. 

இந்த பள்ளிவாசல்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் ரம்ஜான் சிறப்பு தொழுகையான திராவி தொழுகையுடன் ரமலான் மாதம் முதல் நோன்பு ஆரம்பமாகிறது. புதன்கிழமை அதிகாலை தொழுகை 3:30 மணி முதல் தொடங்குகிறது. புதன்கிழமை மாலை சுமார் 6:40 மணியளவில் நோன்பு நிறைவேறுகிறது. 

மாலையில் நோன்பு திறக்க அனைவரும் பள்ளிவாசல்களுக்கு வருவார்கள். தற்போது கரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் தொற்று பரவாமல் இருப்பதற்காக முஸ்லிம் மக்கள் அவரவர் வீடுகளில் நோன்பு திறந்து கொள்ளலாம், பள்ளிவாசல்களுக்கு யாரும் வர வேண்டாம் என  ஜமாத் கமிட்டியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் வழக்கமான பஜர், லுகர், அஸர், மகரிபு, இஷா ஆகிய 5 நேர தொழுகைகளை வழக்கம்போல் பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தொழுகை மேற்கொள்ளலாம் என ஜமாத் கமிட்டியினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ரமலான் சிறப்புத் தொழுகையான திராவி தொழுகையும் பள்ளிவாசலில் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com