காரைக்காலில் ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்!

காரைக்காலில் தளர்வுகளுடன் கூடிய இரண்டு நாள் ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
காரைக்காலில் வெறிச்சோடிய சாலைகள்
காரைக்காலில் வெறிச்சோடிய சாலைகள்

காரைக்கால்:  காரைக்காலில் தளர்வுகளுடன் கூடிய இரண்டு நாள் ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

புதுவையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதுபோல வார இறுதி நாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு அறிவிப்பு செய்யப்பட்டது. திங்கள்கிழமை முதல் பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் வெறிச்சோடிய சாலைகள்
காரைக்காலில் வெறிச்சோடிய சாலைகள்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. நகரத்தில் பிரதான சாலைகள் பல வெறிச்சோடிக் காணப்படுகின்றன. காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் சொற்ப எண்ணிக்கையில் பயணிக்கின்றன.

அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்கும் வகையில் மளிகை, காய்கறி, பால், மருந்துக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவைகளை வாங்குவதற்காக மக்கள் வெளியே வருகின்றனர்.

மகாவீர் ஜெயந்தி நாளையொட்டி இறைச்சி, மீன் விற்பனை செய்யப்படவில்லை. பேருந்துகள், கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயக்கப்படவில்லை. அவசியத்துக்கான வாகனங்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்திலும் பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தமிழக எல்லையையொட்டிய சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெறுகிறது.

ஊரடங்கின் முதல் நாளான சனிக்கிழமையைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை காரைக்காலில் ஊரடங்கை பொதுமக்கள் அனுசரித்து நடந்துகொள்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com