டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

28 ஆயிரம் கி.லி. மண்ணெண்ணெய் தேவைக்கு மத்திய அரசின் ஒதுக்கீடு 7,500 கி.லி. மட்டுமே: அமைச்சர் ஆர்.சக்கரபாணி

தமிழகத்துக்கு 28 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 7 ஆயிரத்து 500 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கி வருவதாக அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்தார்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 10:25 am

DIN

வேலூர்: தமிழகத்துக்கு 28 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 7 ஆயிரத்து 500 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கி வருகிறது. கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக உணவுப்பொருட்கள் வழங்கல்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்தார்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு, வழங்கல் துறை சார்பில் ஆய்வுக்கூட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட தொடக்க விழா வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உணவுப்பொருட்கள் வழங்கல்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

பின்னர் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியது: வேலூர் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் அரசு சார்பில் கரோனா நிவாரண நிதி ரூ. 4000-மும், 14 வகையான மளிகைப் பொருள்களும் 99 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் இதுவரை 7 லட்சம் பேர் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் 3.50 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்த மாதம் முதல் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

தமிழகத்தில் 2,608 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இந்தாண்டு 44 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுக்க இரு கூடுதல் காவல் கண்காணப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த மே மாதத்தில் மட்டும் பொதுவினியோகத் திட்ட அரிசி கடத்தலில் ஈடுபட்ட 256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்து 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 937 டன் அரிசி, 7253 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் மத்திய தொகுப்பில் இருந்து போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது. மண்ணெண்ணெய்யை பொருத்தவரை 28 ஆயிரம் கிலோ லிட்டர் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால், 7 ஆயிரத்து 500 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் நியாய விலைக் கடைகள் வாடகைக் கட்டடத்தில் இயங்குகின்றன. அவற்றுக்கு சொந்தமாக கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும். மேலும் நியாய விலைக்கடைகளில் உள்ள 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். போலியாக செயல்பட்டுவரும் குளிர்பான தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றின் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.