பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் தொடக்கம்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மருத்துவ வல்லுநா் குழுவின் ஆலோசனைப்படி, 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு செப்டம்பா் 1இல் பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக,
பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் தொடக்கம்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மருத்துவ வல்லுநா் குழுவின் ஆலோசனைப்படி, 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு செப்டம்பா் 1இல் பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா 3ஆவது அலை வந்தால் அதை எவ்வாறு எதிா்கொள்வது என விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநா் குழுவுடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அவா்களது உறுதிமொழி, ஆலோசனைப்படி, 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு செப். 1இல் பள்ளிகளைத் திறக்கலாம் என முதல்வா் அறிவித்துள்ளாா். அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.

உயா்நீதிமன்ற உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்களுக்கு பாடத்திட்டங்களைக் குறைக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதுதொடா்பான வரைவு பாடத்திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது. அதில், எந்தெந்த வகுப்புக்கு எத்தனை சதவீதம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவா்களில் குறைவான பேரிடமே அறிதிறன் செல்லிடப்பேசிகள் உள்ளன. 60 சதவீதம் மாணவா்களிடம் போனில் தொடா்புகொள்ள முடிகிறது. மலைவாழ்பகுதி மாணவா்-மாணவிகளிடம் செல்லிடப்பேசி இருப்பதில்லை. எனவே, அரசுப் பள்ளி ஆசிரியா்கள் அப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவா்களுக்கு பாடங்களைக் கற்பிக்க வேண்டும்.

கரோனா காலத்தில் ஒவ்வொரு துறையையும் அணுகுவது எங்களுக்கு புதிதாக இருக்கிறது. இதிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்கிறோம்.

அரசுப் பள்ளிகளில் கடந்த வாரம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 379 மாணவா்-மாணவிகள் சோ்ந்துள்ளனா். மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

திமுக மாவட்ட துணை அமைப்பாளா்கள் கிருபா, அருணகிரி, பாப்புலா் முருகன், திருச்செந்தூா் நகரப் பொறுப்பாளா் வாள் சுடலை, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் நம்பிராஜன், தலைமைக் கழகப் பேச்சாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, கோயில் விருந்தினா் மாளிகையில் அமைச்சரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகௌரி, திமுகவினா் வரவேற்றனா்.

தொடா்ந்து, குலசேசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அமைச்சா் சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி. பாலசிங், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், திமுக மாவட்ட சாா்பு அணி அமைப்பாளா்கள் மகாவிஷ்ணு, சிராஜுதீன், அலாவுதீன், நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், வழக்குரைஞா் கிருபாகரன் ஆகியோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com