காங்கயம்: தொழிலதிபர் மகன் கடத்தப்பட்டு ரூ.3 கோடி கொடுத்து மீட்பு: மூவர் கைது
காங்கயம் அருகே அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


காங்கயம்: காங்கயம் அருகே அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: காங்கயம் அருகே காடையூரில் அரிசி ஆலை நடத்தி வருபவர் தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக காங்கயத்தில் பிரமாண்டமான திருமண மண்டபமும் உள்ளது. இவரது மகன் சிவபிரதீப் (22). இவர் அரிசி ஆலை நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில், பிரதீப்பும் மற்றும் அவரது கார் டிரைவரும் ஒரு காரில் காங்கயம் அருகே பாப்பினி-வீரசோழபுரம் பகுதியில் இவர்களுக்குச் சொந்தமான புதிய அரிசி ஆலை அமையவுள்ள இடத்தை பார்வையிடச் சென்றுள்ளனர்.
ஆய்வு முடிந்து, அந்த இடத்தை விட்டு வெளியே வரும்போது, எதிரே டாடா சுமோ காரில் வந்த ஏழு நபர்கள் கொண்ட குழுவினர், சிவபிரதீப்பின் காரை நிறுத்தியுள்ளனர். அந்த 7 பேரில், டிரைவர் மட்டும் காக்கி உடையில் இருந்துள்ளார். தாங்கள் ராம்நாடு போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தாங்கள் ஓட்டிவந்த டாட்டா சுமோ காரில் சிவபிரதீப்பையும், அவரது ஓட்டுநரையும் ஏற்றிக் கொண்டு, பிரதீப் சென்ற இனோவா காரையும் உடன் கொண்டு சென்றுள்ளனர்.
திண்டுக்கல் சிறுமலை பகுதிக்கு கடத்திச் சென்று, சிவ பிரதீப்பின் ஓட்டுநர் சதாம் என்பவரின் செல்போனை வாங்கி, சிவ பிரதீப்பின் தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு போன் செய்து, பணம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்காமல் போனாலோ அல்லது போலீசுக்குப் போனாலோ சிவபிரதீப்பை கொன்று விடுவதாகவும் போனில் மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவருடைய உறவினர் ஒருவருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் அங்கு சென்று, கடத்தல்காரர்கள் கேட்ட பணம் ரூ.3 கோடி பணத்தை 3 அரிசிப் பைகளில் எடுத்துச் சென்று, கடத்தல்காரர்களிடம் கொடுத்து, மகன் சிவபிரதீப், ஓட்டுநர் சதாம் மற்றும் இன்னோவா கார் ஆகியனவற்றை மீட்டுக் கொண்டு, திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் செய்தனர்.
மேலும், காரில் சென்று கொண்டிருந்தபோது, கடத்தல்காரர்கள் பேசியதை வைத்து, கடத்திய நபர்களின் பெயரையும் சிவபிரதீப் போலீசில் சொல்லியுள்ளார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குபப்பதிவு செய்து, உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் சென்னைக்கும், மதுரைக்கும் விரைந்தனர்.
இந்த நிலையில், கடத்தல் சம்பவம் தொடர்பாக காங்கயம் தனிப்படை போலீசார் திங்கள்கிழமை இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக திண்டிவனம், குளமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரின் மகன் சக்திவேல் (37), மதுரையைச் சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவரின் மகன் அகஸ்டின் (45), ஆந்திரா மாநிலம், நெல்லூர், ஏ.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த எஸ்திராஜ் என்பவரின் மகன் பாலாஜி (38) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும், இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக மீதமுள்ள சென்னையை சேர்ந்த சையது, மதுரையை சேர்ந்த பாலன், நத்தம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் மற்றும் அவர்களது கார் ஓட்டுநர் ஆகிய 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...