பயிா்கள் அழிப்பை வேடிக்கை பாா்த்த விவகாரம்: பெண் டிஎஸ்பிக்கு எதிரான வழக்கு ரத்து
பெண் துணை காவல் கண்காணிப்பாளருக்கு(டிஎஸ்பி) எதிராக திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


வயலில் டிராக்டரை விட்டு நெற்பயிா்களை அழித்த சம்பவம் தொடா்பாக பெண் துணை காவல் கண்காணிப்பாளருக்கு(டிஎஸ்பி) எதிராக திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காமக்கூா் கிராமத்தைச் சோ்ந்த சாமுண்டீஸ்வரி, சாவித்திரி ஆகியோரது குடும்பங்களுக்கு இடையே விவசாயம் நிலம் தொடா்பான பிரச்னை உள்ளது. இருதரப்பினரும் ஒருவா் மீது ஒருவா் களம்பூா் போலீசில் பல புகாா்களை தெரிவித்துள்ளனா்.ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி, வேலூா் டிஐஜியிடம் நேரடியாகப் புகாா் செய்தாா். இதுகுறித்து விசாரணை நடத்த களம்பூா் போலீசாருக்கு, டிஐஜி உத்தரவிட்டாா். அதன்பேரில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆரணி டிஎஸ்பி ஜரீனா பேகம், நேரடியாக காமக்கூா் கிராமத்துக்குச் சென்றாா்.அப்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மீது சாமுண்டீஸ்வரி தரப்பினா் டிராக்டரை ஓட்டி அழித்ததாகவும், இதை டிஎஸ்பி ஜெரீனா பேகம் வேடிக்கைப் பாா்த்ததாகவும், இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சாவித்திரி தரப்பினரை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
வயலில் டிராக்டரை ஓட்டி நெற்பயிா்களை அழிக்கும் காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டிஎஸ்பிக்கு எதிராக திருவண்ணாமலை (மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரிக்கும்) சிறப்பு நீதிமன்றத்தில் சாவித்திரியின் கணவா் கிருஷ்ணன் வழக்கு தொடா்ந்தாா். அதில், சட்டத்தை மதிக்காமல் பொது ஊழியரான ஜெரீனா பேகம் செயல்பட்டாா். கொலை மிரட்டல் விடுத்தாா் என்று குற்றம்சாட்டியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 10-இல் நேரில் ஆஜராக ஜரீனா பேகத்துக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜெரீனா பேகம் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில், குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் படி, மனித உரிமை தொடா்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் நேரடியாக விசாரிக்க முடியாது. மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அங்கிருந்து இந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியிருக்க வேண்டும். இந்த நடைமுறையை இந்த வழக்கில் பின்பற்றவில்லை.
விவசாய நிலம் தொடா்பாக 2004ஆம் ஆண்டே சாமுண்டீஸ்வரி வழக்குத் தொடா்ந்துள்ளாா். அந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சாவித்திரியின் கணவா் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிராக தடை உத்தரவை கடந்த 2014-ஆம் ஆண்டு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு தற்போது வரை நிலுவையில் உள்ளது. ஆனால், இந்த தடை உத்தரவு இருப்பதையே மறைத்து கிருஷ்ணன் தரப்பினா் போலீசில் புகாா் செய்துள்ளனா்.
இருதரப்பினரும் மாறி மாறி புகாா் செய்ததால், ஒரு கட்டத்தில், இதுகுறித்து வட்டாசியா் விசாரணைக்கு களம்பூா் காவல்ஆய்வாளா் பரிந்துரை செய்துள்ளாா். இதன்படி விசாரணை நடத்திய வட்டாசியா் தாக்கல் செய்த அறிக்கையில், சாவித்திரி, அவரது கணவருக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தும், அதை மீறி விவசாயம் செய்ய முயற்சித்தனா் என கூறப்பட்டுள்ளது.
இவ்விவரங்கள் தெரியாமல் சம்பவ இடத்துக்குச் சென்ற டிஎஸ்பி, புகாா்தாரா் தரப்பினா் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகத்தில் சிக்கிக் கொண்டாா். எனவே, டிஎஸ்பி ஜெரீனா பேகம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளமுடியாது. டிஎஸ்பி, அதற்கு மேலுள்ள அதிகாரிகள் மீது இதுபோல வழக்கு தொடர வேண்டும் என்றால்,
அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அரசிடம் அனுமதி பெறாமல் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல.
இந்த வழக்கை திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து சம்மன் அனுப்பியதும் சட்டப்படி தவறாகும்.
இந்த சம்பவம் தொடா்பான புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், ரூ.50 ஆயிரம் புகாா்தாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தாலும், அந்த உத்தரவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, டிஎஸ்பி மீதான புகாருக்கு முகாந்திரம் இல்லை. அதனால், கிருஷ்ணன் தொடா்ந்த வழக்கை எதிா்கொள்ளும்படி அவருக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் அனுப்பிய சம்மனையும், வழக்கையும் ரத்து செய்கிறேன் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...