/

சிறு தொழில்களை ஊக்குவிக்க சிட்கோவில் மனைகள் விலை குறைப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிறு, குறுந் தொழில்களை ஊக்குவிக்க சிட்கோ பகுதியில் உள்ள மனைகளின் விலை குறைக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். எந்தெந்த இடங்களில் உள்ள

News image
Updated On :7 டிசம்பர் 2021, 6:54 pm

DIN

சிறு, குறுந் தொழில்களை ஊக்குவிக்க சிட்கோ பகுதியில் உள்ள மனைகளின் விலை குறைக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். எந்தெந்த இடங்களில் உள்ள மனைகளின் விலைகள் குறைக்கப்படுகின்றன என்கிற விவரங்களையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு சிறு தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) கீழுள்ள தொழில் மனைகளின் விலை அதிகமாக இருப்பதால் அவை பல ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்படாமல் காலி மனைகளாகவே உள்ளன. இதனால், மனைகளின் விலை மதிப்பினை இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக கணிசமாகக் குறைத்துள்ளது சிட்கோ நிறுவனம்.

எவ்வளவு விலை குறைப்பு? ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கரின் மதிப்பு ரூ.1 கோடியே 19 லட்சத்தில் இருந்து 75 சதவீதம் குறைத்து ரூ.30.81 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் ஏக்கருக்கு ரூ.3 கோடியே 4 லட்சத்தில் இருந்து 73 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.81 லட்சத்து 89 ஆயிரமாகவும், நாகப்பட்டினத்தில் ஏக்கருக்கு ரூ.2 கோடியே 39 லட்சத்தில் இருந்து 65 சதவீதம் குறைத்து ரூ.85 லட்சத்து 35 ஆயிரமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் குறிச்சியில் ரூ.9 கோடியில் இருந்து ரூ.4.2 கோடியாகவும், திருப்பத்தூா் மாவட்டம் விண்ணமங்கலத்தில் ரூ.4.8 கோடியில் இருந்து ரூ.2 கோடியாகவும், செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூரில் ரூ.6 கோடியில் இருந்து ரூ.3.5 கோடியாகவும், ஈரோடு தொழிற்பேட்டையில் ரூ.6.4 கோடியில் இருந்து ரூ.3.8 கோடியாகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிக விலை மதிப்பினால் பல ஆண்டுகளாக குறைவான மனைகளே ஒதுக்கீடு செய்யப்பட்டு 400-க்கும் மேற்பட்ட காலி தொழில்மனைகளைக் கொண்ட காரைக்குடி, பிடாநேரி, ராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு 30 சதவீதம் முதல் 54 சதவீதம் வரையிலும், விருதுநகா், அரக்கோணம், பா்கூா் தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு 50 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 19 தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு சுமாா் 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 12 தொழிற்பேட்டைகளுக்கான மனை மதிப்பு கடந்த 2016-17-ஆம் ஆண்டில் இருந்த மதிப்பே நிகழாண்டுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நோக்கம் என்ன? மனைகளின் விலை குறைப்பு நடவடிக்கைகளால், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோா் குறைவான விலையில் மனைகளைப் பெற்று தொழில் தொடங்க முடியும். இதன்மூலம் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.