சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மக்களை திசை திருப்பும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை நடத்தி வருவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குறை கூறியிருக்கிறார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் மூன்று, நான்கு தவிர வேறு எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித் தொகை, நீட் தேர்வு ரத்து, முதியார் உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உயர்வு என்பது போன்ற எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலைகுறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு விலை குறைத்தார்கள். டீசலுக்கு குறைக்கவேயில்லை. இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைத்தபோதிலும் திமுக அரசு குறைக்கவில்லை.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக, சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை மறைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறது.