திருவொற்றியூர்: ஒரு வாரத்துக்குள் மாற்று வீடுகள் - அமைச்சர் தா.மோ. அன்பரசன்

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டட விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு இன்று மாலைக்குள் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும் ஒரு வாரத்துக்குள் மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று ந
திருவொற்றியூர்: ஒரு வாரத்துக்குள் மாற்று வீடுகள் - அமைச்சர் தா.மோ. அன்பரசன்
திருவொற்றியூர்: ஒரு வாரத்துக்குள் மாற்று வீடுகள் - அமைச்சர் தா.மோ. அன்பரசன்


சென்னை: சென்னையை அடுத்த திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டட விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு இன்று மாலைக்குள் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும் ஒரு வாரத்துக்குள் மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில், கிராமத் தெருவில் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டமானது. 

விபத்து நடந்த பகுதியை நேரில் பார்த்து, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அமைச்சர் தா.மோ. அன்பசரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இடிந்து விழுந்த குடிசை மாற்ற வாரிய குடியிருப்புக் கட்டடம் 1993ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. சுமார் 28 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டடம், நீண்டநாள் பயன்பாடு, தட்பவெப்ப நிலை காரணமாக இன்று காலை திடீரென இடிந்து விழுந்துள்ளது.

வீடுகளை இழந்தவர்கள் தற்காலிகமாக அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்த 24 குடும்பங்களுக்கும், இன்று மாலைக்குள் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓரிரு நாள்களில் மாற்று வீடுகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள பழமையான குடிசைமாற்று வாரிய வீடுகள் ஆய்வு செய்யப்படும். இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் சுமார் 23,000 வீடுகள் பழமையானதாக கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பழமையான குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளும் அகற்றப்படும் என்றும் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூரில் இன்று காலை இடிந்துவிபந்த குடியிருப்பில், இரவு நேரத்தில் திடீரென பெரிய சத்தம் கேட்டு, கட்டடத்தில் விரிசல் விழுந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறிய நிலையில், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு இன்று காலை 10.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இதனால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது.

திருவொற்றியூரில், கிராமத் தெருவில் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டமானதில், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடும், ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com