அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற்ற திட்டங்களை முதல்வரால் பட்டியலிட முடியுமா? ஸ்டாலின் கேள்வி

மதுரை எய்ம்ஸ் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் முதல்வர் கேட்பாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2021, 5:24 pm

DIN

தமிழக நலனுக்காக, உரிமைக்காக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற்றத் திட்டங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியால் பட்டியலிட முடியுமா? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது: 

நாங்கள் பாஜகவுக்கு அடிமை இல்லை, எதை தட்டிக் கேட்க வேண்டுமோ அதை கேட்போம் என்று இரு நாள்களுக்கு முன்பு முதல்வர் பேசியுள்ளார். அவரது இந்த நிலைபாடு உண்மையெனில்,   மத்திய அரசு 2015-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது? இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லையே ஏன்? என்ற கேள்வியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமரிடம் கேட்பாரா?

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானத்தை மத்திய அரசு இதுவரை மதிக்காதது ஏன்? 7 பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் மூலம் மத்திய அரசு நாடகம் நடத்துவது ஏன்? என்ற கேள்விகளை பிரதமரிடம் முதல்வரால் கேட்க முடியுமா?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபின்னரும், தனி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை உருவாக்காமல் மத்திய அரசின் ஜல்சக்தி துறையில் ஒரு பிரிவாக தமிழக உரிமையை மூடிவைத்தது ஏன்? என்ற கேள்வியை, காவிரிக் காப்பாளர் பட்டத்தைப் பயன்படுத்தும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமரிடம் கேட்க முடியுமா? டெல்டா மாவட்டங்களின் காவிரி உரிமையைப் பாதுகாக்க அதிகாரமிக்க காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுக்க முதல்வர் தயாராக உள்ளாரா? மேக்கேதாட்டில் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தக் கூட முதல்வர் முன்வரவில்லை என்பதுதான் உண்மை.

புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்காக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு  இனங்களின் மூலம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 19 ஆயிரம் கோடியை மத்திய அரசு முழுமையாக இதுவரை வழங்கவில்லை. நகர்ப்புறங்கள் மற்றும் உள்ளாட்சி வளர்ச்சிக்காக 14-ஆவது நிதி ஆணையம் தமிழகத்துக்கு ரூ. 2,500 கோடி அனுமதித்ததாகவும், அந்தத் தொகையைக் கடந்த 3 ஆண்டாக வழங்கவில்லை எனவும் துணை முதல்வர் கூறுகிறார். காரணம், தமிழகத்தின் எந்த உரிமையையும் தமிழக முதல்வர், மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறவில்லை என்பதுதான். கடந்த 4 ஆண்டு காலத்தில் தமிழக நலனுக்காக மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெற்றதை நிதி ஒதுக்கீடுகளை, திட்டங்களை முதல்வரால் பட்டியலிட முடியுமா? 

கண்களில் கனவுகளையும், இதயத்தில் ஏக்கத்தையும் சுமந்து கொண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் மக்கள் அனைவரின் நம்பிக்கையும் நிச்சயம் நான் காப்பேன்.  உங்கள் கவலைகள், இனி என்னுடையவை. நீங்கள், உங்கள் பாரத்தை என்னிடம் இறக்கி வைத்து விட்டுச் செல்லுங்கள். உங்கள் பாரத்தை இனி நான் சுமக்கிறேன். விரைவில் திமுக ஆட்சி அமையும், அப்போது அனைத்துப் பிரச்னைகளும் தீரும் என்றார் ஸ்டாலின்.

முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், தஞ்சை (வடக்கு) மாவட்டத்துக்கு உள்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து ஸ்டாலின் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். 

நிகழ்ச்சியின் தொடக்கமாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்கள், விளையாட்டுத் துறையில் பதக்கம் பெற்றவர்கள் என 10 பேருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார் ஸ்டாலின். 

நாகை (வடக்கு) மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா எம். முருகன், தஞ்சாவூர் (வடக்கு) மாவட்ட திமுக செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவி. செழியன், க. அன்பழகன் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.