சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50 -ஆக குறைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50-ஆக குறைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்தில் விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரையும், பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் வரையும் 45 கி.மீ. தொலைவில் திட்டப்பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் வரையிலான முதல் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3,770 கோடியில் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 9.051 கி.மீ. தொலைவுள்ள இந்த வழித்தடத்தில் 2 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும், 5 உயா்நிலைப்பாதை ரயில் நிலையங்களும் என்று ஏழு மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த பிரதமா் மோடி, இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அன்றைய தினம் இரவு 11 மணி வரை இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்நிலையில், சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரு.50 ஆக குறைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 29.6.2015 இல் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் சேவையை துவக்கியது.  5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து, 6 ஆம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது. இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் கீழ்கண்டவாறு குறைப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் 2 கிலோமீட்டர் வரை பயணிக்க வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாற்றமின்றி ரூ.10 ஆக உள்ளது. 2-5 கிலோமீட்டர் வரை கட்டணம் ரூ.30-இல் இருந்து ரூ.20-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனைபோன்று, 5-12 கிலோமீட்டர் வரை கட்டணம் ரூ.40-இல் இருந்து ரூ.30 ஆகவும், 12-21 கிலோமீட்டர் வரை கட்டணம் ரூ.50-இல் இருந்து ரூ.40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 18-24 கிலோமீட்டர் வரை கட்டணம் ரூ.60 இல் இருந்து ரூ.50 ஆகவும், 24 கிலோமீட்டருக்கு மேல் கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனைபோல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாள்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீத  தள்ளுபடி. (வரையறுக்கப்படாத பயண அனுமதி சீட்டுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நாள்களில் செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் நீங்கலாக) என்றும் வ்ழ் ஸ்ரீர்க், தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வரையறுக்கப்படாத மெட்ரோ கட்டணமாக புதிய வழித்தடத்தையும் சேர்த்து ரூ.100 ஆகவே வசூலிக்கப்படும்.

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கு அதே ரூ.100 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு மாத கட்டணத்தில், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கு அதே ரூ.2500 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் குறைப்பு நாளை மறுநாள் திங்கள்கிழமை (பிப்.22)  முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com