புதுவைக்கு 10 நாள்களில் கரோனா மருந்து வரும்: முதல்வர் நாராயணசாமி

புதுவைக்கு இன்னும் 10 நாள்களில் கரோனா மருந்து வரும் வாய்ப்பு இருப்பதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவைக்கு இன்னும் 10 நாள்களில் கரோனா மருந்து வரும் வாய்ப்பு இருப்பதாக முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நிறுவன கண்டுபிடிப்பான ஆஸ்ட்ராஜெனிக்கா என்னும் கரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்க மகாராஷ்டிர மாநில புணே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு இந்திய அறிவியல் கழகம் அனுமதி அளித்துள்ளது. இங்குத் தயாரிக்கப்பட்ட மருந்து 5 கோடி பேருக்கு வழங்கத் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் மூன்று கட்டமாக இம்மருந்து பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் இதை நோயாளிகளுக்கு செலுத்த இந்திய விஞ்ஞான கழகம் சில நாள்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பாரத் பயோடெக் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த கோவாக்சின் மருந்து மூன்று கட்ட பரிசோதனையில் உள்ளது. இம்மருந்துகள் அனுப்பப்பட்டால் புதுவையில் புதுச்சேரி,  காரைக்கால், மாஹே,  ஏனாம் ஆகிய இடங்களில் 9 இடங்களில் மாதிரி ஊசி போடும் மையங்கள் உருவாக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் உள்ள மையத்தை நான் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டேன். இம்மையத்துக்கு மருந்து செலுத்த வரும் நோயாளிகளின் பெயர், அவர்களது ஆதார் எண் உள்ளிட்டவை அனைத்தும் எழுதப்படும். பின்னர் கரோனா தடுப்பூசி போடப்படும். பின்விளைவு ஏதாவது இருக்கிறதா என ஆய்வு செய்ய நோயாளிகள் அரை மணி நேரம் காத்திருக்கவைத்துக் கண்காணிப்பார்கள். அப்போது பக்க விளைவு இருந்தால் அதைச் சரிசெய்யும் மருந்துகளையும் தயார் நிலையில் உள்ளது. இந்த பரிசோதனை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.

இம்மருந்து செலுத்த போதுமான பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்ட்ராஜெனிக்கா மருந்து வரும் நேரத்தில் புதுவையில் நோயாளிகளுக்குச் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

இப்போது புதுவையில் முதல்கட்டமாக கரோனா தடுப்பு முதல்கட்ட பணியாளர்களுக்கு ஊசி போடப்படும்.  அந்த வகையில் சுகாதாரத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் என மொத்தம் 14,000 பேருக்கு முதல்கட்டமாக ஊசி போடப்படும். இம்மருந்துகளைப் பாதுகாக்க புதுச்சேரியில் 29,  காரைக்காலில் 8, மாஹேவில் 3,  ஏனாமில் ஒன்று என 41 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக கரோனா ஊசி போட்டுக்கொள்ள மொத்தமுள்ள 14,000 முதல்கட்டப் பணியாளர்களில் 13,000 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். ஒரு மையத்தில் 100 முதல் 200 பேருக்கு ஊசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக களப் பணியிலிருந்த காவல்துறை, வருவாய்த்துறை, நகாரட்சித்துறை, மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊசி போடப்படும். இன்னும் 10 நாள்களுக்குள் கரோனா மருந்து வரும் நிலை உள்ளது.

கரோனா மருந்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி செய்துள்ளார்.  மத்திய அரசு வழங்கவில்லை என்றாலும்  மாநில அரசு நிதியில் போடப்படும். மூன்றாவது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மூன்றாவது கட்டமாக மருந்து செலுத்தப்படும். இதற்கான முழு விவரம் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.

புதுவையில் மொத்தமுள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 சதவீத பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, கரோனா பாதிப்பால் குணமடைந்தோர், இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. புதுவை அரசின் தீவிர நடவடிக்கை தான் இதற்குக் காரணம் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com