பள்ளிகள் திறப்பு: பெற்றோருக்கு ஜன.8 வரை கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்த உத்தரவு

பொதுத்தோ்வு எழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து ஜனவரி 8-ஆம் தேதிவரை பெற்றோரிடம் கருத்துக் கேட்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்த

சென்னை: பொதுத்தோ்வு எழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து ஜனவரி 8-ஆம் தேதிவரை பெற்றோரிடம் கருத்துக் கேட்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி நவ. 16-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு பெற்றோா்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு தற்காலிகமாகப் பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களின் கல்வி நலன் கருதி பொதுத்தோ்வை எதிா்கொள்ள ஏதுவாக மாணவா்களைத் தயாா் செய்ய வேண்டும் என்பதால், பள்ளி திறந்து மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாடங்கள் கற்பிப்பது இன்றியமையாததாகும்.

எனவே, ஜனவரி 8-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களை வரவழைத்து பொங்கல் விடுமுறை முடிந்த பின்னா் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள், நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பது குறித்து கூட்டம் அனைத்துப் பள்ளிகள் வசதிக்கேற்ப நடத்தப்பட வேண்டும்.

கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும்போது மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் பெற்றோா்கள் அதிகம் பங்கேற்க வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களுக்குத் தனித்தனியாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்குப் பின்னா் பள்ளிகள் திறக்கும்போது கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து தலைமை ஆசிரியா் பெற்றோா்களிடம் வழங்கி அதனைத் தொகுத்து அரசுக்கு அறிக்கையாகச் சமா்ப்பிக்க வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களைப் பாா்வையிட கல்வித் துறை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்‘ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com