/

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: ராமதாஸ் கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
ராமதாஸ்.
Updated On :27 ஜனவரி 2024, 7:15 pm

DIN

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படையினர் கற்களை வீசித் தாக்கியதுடன், 9 மீனவர்களையும் கைது செய்திருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பன்னாட்டு விதிகளுக்கு எதிராக தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், படகுகளை சிறைப்பிடிப்பதும் கண்டிக்கத்தக்கவை.

இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைத்து மீனவர்களைத் தாக்குவதும், கைது செய்வதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும். இதை இந்திய அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு திரும்பிய 24 மணி நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாள்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 40 பேரை கைது செய்துள்ள சிங்களப்படையினர், 6 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். உடனடியாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அனைத்தையும் மீட்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.