கரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக் கூடாது: விஜயபாஸ்கர்

கரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி: கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையிலிருந்து தமிழகத்தின் 10 மண்டலங்களுக்கு கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சிக்கு வந்த கரோனா தடுப்பூசிகள் அனைத்தும், காஜாமலை பகுதியில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலக பாதுகாப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கிடங்கை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் புதன்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சருடன், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, ஆட்சியர் சு. சிவராசு ஆகியோரும் ஆய்வில் பங்கேற்றனர்.

திருச்சியிலிருந்து இதர மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய கரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பு வாகனங்களுடன் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், வழியனுப்பி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தடுப்பூசி தமிழகத்தில் உள்ள 10 மண்டலங்களுக்கும் வந்து சேர்ந்துள்ளது. மண்டலங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுகிறது. திருச்சிக்கு 17,100, புதுக்கோட்டைக்கு 3,800, அறந்தாங்கி- 3,100, பெரம்பலூர்- 5,100, அரியலூர்- 3,300, கரூர்- 7,800, தஞ்சாவூர்- 15,500, திருவாரூர்- 6,700, நாகப்பட்டினம்- 6,400 என மொத்தமாக 9 சுகாதார மாவட்டங்களுக்கு 68,800 தடுப்பூசிகள் வந்துள்ளன. 

மண்டலங்களுக்கு தடுப்பூசி அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
மண்டலங்களுக்கு தடுப்பூசி அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

வரும் 16 ஆம் தேதி தடுப்பூசி வழங்கும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட 42 நாள்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி வரும். முதல் டோஸ் போட்டவுடன் மது அருந்தக் கூடாது. 2 ஆவது டோஸ் போடும் வரையில் 28 நாள்களுக்கு மது அருந்தக் கூடாது. தடுப்பூசி போடும் நபர்களை எதற்காகவும் தனிமைப்படுத்த வேண்டாம். தடுப்பூசி அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com