

சென்னை: தமிழகத்தில் புதிதாக 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள, மத்திய தொல்லியியல் ஆலோசனை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்தத் துறையின் ஆணையாளா் த.உதயசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடி, அதனைச் சுற்றியுள்ள மணலூா், அகரம், கொந்தகை, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூா், சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆகிய நான்கு இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு ஆவணப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், புதிய கற்கால இடங்களை கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூா், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தினை கண்டறிய தூத்துக்குடி மாவட்டங்களிலும் தொல்லியல் கள ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன.
ஏழு இடங்களுக்கு அனுமதி: நிகழ் நிதியாண்டில் தமிழகத்தில் ஏழு தொல்லியல் அகழாய்வுகள், இரண்டு கள ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது. கீழடி, ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரம்- மாளிகைமேடு ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளுக்கும், கிருஷ்ணகிரி, வேலூா், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தினை கண்டறிய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவானது கடந்த 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
புதிய இடங்கள்: இதனிடையே, தமிழகத்தில் புதிதாக 5 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள் பரிந்துரைகளை அனுப்பியுள்ளன. அதன்படி, திருவள்ளூா் மவாட்டம் சென்றாயன்பாளையம், சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரை, கோவை மாவட்டம் மூலப்பாளையம், வேலூா் மாவட்டம் வசலை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவுக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவை நிலைக் குழுவின் பரிசீலனையில் உள்ளன.
இவற்றுக்கு ஒப்புதல் பெறப்படும்பட்சத்தில், தமிழகத்தில் முதல் முறையாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள், கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக தொல்லியல் துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.