புதுச்சேரியில் 23 தொகுதிகளிலும் தாமரை மலரும்:  ஜே.பி.நட்டா பேச்சு

புதுச்சேரியில் 23 தொகுதிகளிலும் பாஜக வெல்லும், தாமரை மலரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரியில் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் பாஜகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.
புதுச்சேரியில் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் பாஜகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.


புதுச்சேரியில் 23 தொகுதிகளிலும் பாஜக வெல்லும், தாமரை மலரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் கடந்த 28 ஆம் தேதி தில்லியில் பாஜனதாவில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர், இதனைத் தொடர்ந்து நமச்சிவாயம் ஆதரவாளர்கள் இணைப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஏஎப்டி மில் திடலில் நடைபெற்றது.

இதில் பங்கேற்க மதுரையில் இருந்து தனி விமானத்தில் தேசிய தலைவர் நட்டா புதுச்சேரி வந்தார்.

கார் மூலம்  ஆளுர் மாளிகை அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கார் மூலம் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்து பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் நமச்சிவாயத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த ஆதரவாளர்கள் பங்கேற்று பாஜகவில் இணைந்தனர். 

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் தலையெழுத்தை பாஜக மாற்றும் புதுச்சேரியில் 2021 இல் தாமரை ஆட்சி மலர சபதம் ஏற்போம் என்றார்.

பாஜக தேசிய தலைவர் நட்டா பேசுகையில், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்களில் 92 ஆயிரம் பெண்கள் வங்கி கணக்கை தொடங்கியுள்ளார்கள். 13, 500 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, 6 லட்சம் எல்.இ.டி பல்புகள் வழங்கப்பட்டதாகவும் மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டார் ஜே.பி.நட்டா.

நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது ரூ.5 ஆயிரம் கோடியை ஜார்கண்ட் மாநில கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் புதுச்சேரி மாநிலத்திற்கான கடனை தள்ளுபடி செய்யாமல் துரோகம் இழைத்ததாக நட்டா குற்றச்சாட்டினார்.

புதுச்சேரியில் பாஜக ஆட்சி மலரும் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என நட்டா உறுதியளித்தார்.

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஊழல் இல்லாத ஆட்சி நடத்தப்படும் என்று கூறிய நட்டா, புதுச்சேரியில் 23 தொகுதிகளிலும் தாமரை மலரும். புதுச்சேரி மக்களின் உற்சாகத்தை பார்க்கும் போது 23 இடங்களை விட கூடுதலாக வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் என்றும் நட்டா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com