உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்
Published on
Updated on
2 min read

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் நோக்கங்களை அடைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர், உயர்கல்வியில் மாணாக்கர்களின் சேர்க்கையை மேலும் அதிகரிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், பல்கலைக்கழகங்களின் தரத்தினை உயர்த்திடவும் அறிவுறுத்தினார். அகில இந்திய அளவில் தமிழகத்தில் உயர்கல்வி மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் 51.4 இது தேசிய அளவிலான (27.1) மாணாக்கர்களின் சேர்க்கை விகிதத்தைவிட அதிகமாக இருப்பினும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் இவ்விகிதம் குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையை சீர் செய்யும் விதமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவதுடன் வேலைவாய்ப்புக்கு தகுந்த பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும், தேவையான வருவாய் வட்டங்களில் புதிய கல்லூரிகள் துவங்கவும் ஆலோசிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தவும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் பெற முயற்சிக்கவும் தேசிய நிறுவன தர வரிசை கட்டமைப்பில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவது குறித்தும் செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டது. பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவியரின் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகரிக்கவும், அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெற வழிவகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. GATE தேர்வில் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. 

தொழில்நுட்ப கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும் விதமாக உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும், திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் மின் ஆளுமை திட்டத்தை செயல்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டது. தொழிற்சாலைகளுடன் இணைந்து செயல்பட்டு மாணாக்கர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், பேராசிரியர்களுடன் மாணாக்கர்கள் இணைந்து புதிய உத்திகளை முயற்சிக்கவும், கட்டமைப்புகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கான தங்கும் விடுதிகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு மையத்தின் தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புக்கு உகந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. 

கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் மின்னணு நூலகங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. கல்லூரி வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உகந்த சூழல் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள் தரத்தை மேம்படுத்தவும் நிலையான நிதி மேலாண்மையை உருவாக்கி நிதிச்சுமையை சீராக்க கலந்தாலோசிக்கப்பட்டது. உலக மற்றும் தேசிய அளவில் புகழ் பெற்ற அறிஞர்களை இணைய வழியில் விரிவுரைகள் வழங்க வசதிகள் ஏற்படுத்தவும், கற்றலை மேம்படுத்தும் விதமாக, கற்றல் மேலாண்மை தளத்தை  உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், மாணாக்கர்களின் திறன்களை வெளிக்கொணரும் விதமாக தமிழ் பாரம்பரிய கலை திருவிழாக்கள் கொண்டாடவும் முடிவெடுக்கப்பட்டது.

அதிக அளவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் காலிப்பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள அனைத்து அரிய வகை மற்றும் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை மின்னணு மயமாக்க முடிவு செய்யப்பட்டது. தேசிய உயர்கல்வித் திட்டத்தின் மூலம் உயர்கல்வி நிறுவனத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சிகளுக்காகவும், திறன்பட பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சியாக அரசின் உதவியுடன் அனைத்து துறைகளிலும் டிரோன்களை பயன்படுத்தும் விதமதாக புதிய டிரோன் கார்ப்பரேஷன் நிறுவ ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., முதன்மைச்
செயலாளர் / ஆணையர், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஹர் சஹாய் மீனா, இ.ஆ.ப., இயக்குநர், தொழில்நுட்பக்
கல்வி இயக்ககம் திருமதி. லட்சுமி பிரியா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com