/

பெட்ரோல் விலை உயர்வதால் பிரதமர் மோடி தலைமறைவாகிவிட்டாரா? - திரிணமூல் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி தலைமறைவாகிவிட்டாரா என பெட்ரோல் விலை உயர்வு குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:33 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமறைவாகிவிட்டாரா என பெட்ரோல் விலை உயர்வு குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

நாட்டில் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-யைத் தாண்டியுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புணே ஆகிய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐத் தாண்டியுள்ளது,. இது தில்லி மற்றும் கொல்கத்தாவில் ரூ.99க்கு மேல் உள்ளது.

எதிர்க்கட்சிகள் பலவும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மத்திய பாஜக அரசை கடுமையாக சாட்டியுள்ளது. 

எரிபொருள் விலை வரலாற்று உச்சத்தை அடைந்ததால் மக்களின் துயரங்களைச் சேர்க்க பாஜக கடுமையாக உழைப்பதாகத் தெரிவித்துள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொது செயலாளரும் மக்களவை எம்.பியுமான அபிஷேக் பானர்ஜி 'இந்திய மக்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பழைய பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, 'இந்திய மக்கள் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு முறையும் நாடகமிடும் வழக்கத்தை நரேந்திர மோடி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். 

'பெட்ரோல் விலைகள் உயர்ந்து வருவதால், அவர் ஏன் தலைமறைவாகி விட்டார்?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

'மோடி அவர்களே, தயவுசெய்து உங்கள் உயர்ந்த குதிரையிலிருந்து இறங்கி, மக்களின் துயரங்களை அறிந்து கொள்ளுங்கள்!' என்று மேற்குவங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் சாடியுள்ளார். 

முன்னதாக எரிபொருள் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா இதுகுறித்து பதிலளிக்கையில், 'மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கவில்லை? தற்போதைய பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு எவ்வாறு நிர்வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் கூட்டு முயற்சி தேவை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.