தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் , இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரை அளித்தது. ஆனால், உச்ச நீதீமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.