மானாமதுரை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு: இருவர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனை காவல் துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மூவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிந்து இருவரை  கைது செய்துள்ளனர்.

சிவகங்கை அருகே பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சங்கையா, காளீஸ்வரி தம்பதியினர், இவர்கள் மானாமதுரையில் குணசேகரன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டு அவரது சலவையகத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

பின்னர் சங்கையா, காளீஸ்வரி இருவரும் சிவகங்கை வந்து அங்கு 48 காலணியைச் சேர்ந்த  காந்தி என்பவரது சலவையகத்தில் வேலை பார்த்துள்ளனர்.

அதன்பின் இவர்கள் மீண்டும் மானாமதுரை குணசேகரன் சலவையகத்துக்கு வேலைக்குச் செல்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து காந்தி அவர்களது 10 வயது மகன் குகன்ராஜை வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி அந்தச் சிறுவனை தன்னுடன் வைத்துக்கொண்டு சங்கையா, காளீஸ்வரி இருவரையும் அனுப்பி விட்டார்.

பின்னர் சிறுவன் குகன்ராஜை  காளையார் கோயில் வட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் ஆடு மேய்க்கும் வேலைக்கு சேர்த்துள்ளார்.  இதற்கிடையில் நெடுங்குளத்தில் 10 வயது சிறுவன் குகன்ராஜ் கொத்தடிமையாக ஆடு மேய்த்து கொண்டிருப்பதாக சிவகங்கை சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார் வந்தது.

இதையடுத்து சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தொழிலாளர் நலத்துறை அமலாக்க உதவி ஆணையர் ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் சத்தியமூர்த்தி, குழந்தைகள் நல குழுத் தலைவர் சரளா, உறுப்பினர்கள் ரசீந்திரக்குமார், ஜீவானந்தம், சைமன் ஜார்ஜ்  ஆகியோர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் நெடுங்குளம் கிராமத்தில் சுப்பிரமணியம் என்பவரிடம் சிறுவன் சங்கையா மகன் குகன்ராஜ் கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்து வருவது தெரியவந்தது. இதையடுத்து மானாமதுரை வட்டம் கே.கே. பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமார் இச் சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் குணசேகரன், காந்தி, சுப்ரமணியன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து காந்தி, சுப்ரமணியன் இருவரையும் கைது செய்தனர். சிறுவன் குகன்ராஜ், இவர்களது பெற்றோர் சங்கையா, காளீஸ்வரி ஆகிய மூவரும் மீட்கப்பட்டு சிவகங்கை குழந்தைகள் நலக்காப்பகத்தில்  தங்க வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com