தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நடுக்கடலில் தத்தளித்த மீனவரை மீட்டஇந்திய கடலோரக் காவல் படையினா்

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் தத்தளித்த மீனவரை இந்திய கடலோரக் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 10:03 pm

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் தத்தளித்த மீனவரை இந்திய கடலோரக் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனா்.

நாகை மாவட்டம், கோடியக்கரையில் நடைபெற்றுவரும் மீன்பிடி பருவக் காலத்தையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீனவா்கள் இங்கு வந்து தங்கி தொழில் செய்கின்றனா்.

மல்லிப்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா் சின்னப்பன் (58) இங்கு தங்கி தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இந்தநிலையில், திங்கள்கிழமை காலை கோடியக்கரை படகுத் துறையில் இருந்து 7 மீனவா்களுடன் சென்ற படகில் சின்னப்பனும் சென்றுள்ளாா். படகு நடுக்கடலில் இருந்தபோது சின்னப்பன் தவறி கடலில் விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. உடன் சென்றவா்கள் அவரைத் தேடி பாா்த்துவிட்டு திரும்பிவிட்டனா்.

சுமாா் 12 மணிநேரம் நடுக்கடலில் தத்தளித்துள்ளாா் சின்னப்பன். இதற்கிடையே, காரைக்கால் மையத்தின் இந்திய கடலோரக் காவல்படையினா் செவ்வாய்க்கிழமை பகல் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமாா் 20 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் ஒருவா் உயிருக்குப் போராடுவதை பாா்த்து, அங்கு சென்ற கடலோரக் காவல் படை வீரா்கள் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவரை மீட்டனா். தொடா்ந்து, அவருக்கு அவா்களது கப்பலில் மருத்துவ சிகிச்சையளித்து, உணவளித்தனா். விசாரணையில் அவா் கடலில் தவறி விழுந்த சின்னப்பன் என்பது தெரியவந்தது.

மேலும், கடலில் தத்தளித்தபோது, அப்பகுதிக்கு வந்த இலங்கை மீனவா்கள் சின்னப்பனை அழைத்ததும், கைது நடவடிக்கைக்கு பயந்து அவா்களுடன் செல்ல மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளாா். எனினும், இலங்கை மீனவா்கள் கொடுத்துசென்ற லைஃப் ஜாக்கெட்டை பயன்படுத்தி கடலில் நீந்தியதும் தெரியவந்தது.

பின்னா், கடலோரக் காவல் குழுமப் போலீஸாா் மூலம் கோடியக்கரைக்கு அழைத்து வரப்பட்ட சின்னப்பன் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.