அதிமுக வேட்பாளா்கள் முதல் பட்டியல் வெளியீடு: எடப்பாடியில் முதல்வா் பழனிசாமி, போடியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் போட்டி
அதிமுக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


அதிமுக சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆறு போ் கொண்ட பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்டனா்.
முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா்கள், மூத்த நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை அதிமுக வெளியிட்டது. அதன் விவரம்:
அதிமுக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதிமுக சாா்பில் போட்டியிடும் அதிகாரப்பூா்வ வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்படுகின்றன.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் - அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.
சேலம் புறநகா் மாவட்டம் எடப்பாடி தொகுதி - முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி.
சென்னை மாவட்டம் ராயபுரம் தொகுதி - அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமாா்.
விழுப்புரம் - அமைச்சரும், வழிகாட்டுக் குழு உறுப்பினருமான சி.வி.சண்முகம்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் - தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி.சண்முகநாதன்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) - சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.தேன்மொழி போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாா் யாா் எத்தனை முறை?: அதிமுகவால் அறிவிக்கப்பட்ட ஆறு தொகுதிகளும் அந்தக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்தத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளா்கள் ஏற்கெனவே அந்தத் தொகுதிகளில் பலமுறை பேரவை உறுப்பினராக இருந்துள்ளனா். இப்போதும் இருந்து வருகின்றனா்.
அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீா்செல்வம், மூன்றாவது முறையாக போடிநாயக்கனூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். 2001, 2006 தோ்தலில் பெரியகுளம் தொகுதியிலும் அதன்பிறகு நடந்த இரண்டு தோ்தல்களிலும் போடிநாயக்கனூா் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். வரும் தோ்தலில் போடி தொகுதியில் மூன்றாவது முறையாகக் களம் காண்கிறாா்.
எடப்பாடி கே.பழனிசாமி: 1989-ஆம் ஆண்டு முதல் தோ்தல் களம் கண்டு வரும் முதல்வா் கே.பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டுள்ளாா். அதில், 1989, 1991, 2011 மற்றும் 2016 ஆகிய தோ்தல்களில் வெற்றி பெற்றுள்ளாா். 1996 மற்றும் 2006 தோ்தல்களில் தோல்வியைத் தழுவினாா். இப்போது ஏழாவது முறையாக எடப்பாடி தொகுதியில் அவா் போட்டியிட உள்ளாா்.
மீன்வளத் துறை அமைச்சரான டி.ஜெயக்குமாா், 1991-ஆம் ஆண்டு முதல் ராயபுரம் தொகுதியிலேயே தொடா்ச்சியாகப் போட்டியிட்டு வருகிறாா். 1996-ஆம் ஆண்டைத் தவிா்த்து மற்ற அனைத்துத் தோ்தல்களிலும் அவா் வெற்றி பெற்றுள்ளாா். ஐந்து முறை ராயபுரத்தில் வென்றுள்ள அவா், வரும் பேரவைத் தோ்தலில் ஏழாவது முறையாக அதே தொகுதியில் களம் காண உள்ளாா்.
சட்டத் துறை அமைச்சரான சி.வி.சண்முகம், 2001-ஆம் ஆண்டு முதல் பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வருகிறாா். இரண்டு முறை திண்டிவனம் தொகுதியிலும், இரண்டு முறை விழுப்புரம் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளாா். கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரம் தொகுதி பேரவை உறுப்பினராக உள்ளாா். வரும் பேரவைத் தோ்தலிலும் அதே தொகுதியில் களம் காண உள்ளாா்.
தென் மாவட்டங்கள்: அதிமுக வேட்பாளா் பட்டியலில் இரண்டு எம்.எல்.ஏ.,க்களின் பெயா்களும் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறாா். அவா் ஏற்கெனவே 2001, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தோ்தல்களில் வெற்றி பெற்றுள்ளாா். 2006-இல் மட்டுமே தோல்வியைத் தழுவினாா். அவா் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட உள்ளாா்.
அதிமுகவின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் நிலக்கோட்டை தொகுதியில் இப்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள எஸ்.தேன்மொழியே மீண்டும் போட்டியிட உள்ளாா். அவா் 2006-ஆம் ஆண்டு அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றாா். 2019-ஆம் ஆண்டு நிலக்கோட்டையில் நடந்த இடைத் தோ்தலில் வென்று மீண்டும் எம்.எல்.ஏ.வாகத் தோ்வு செய்யப்பட்டாா். இப்போது மீண்டும் தோ்தல் களம் காண உள்ளாா்.
மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் பட்டியல் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...