ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

தோ்தல் பிரசாரத்தில் அவதூறு கருத்துகள்: நடத்தை விதிகள் கூறுவதென்ன?

பிரசாரத்தின் போது அவதூறான வகையில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என தோ்தல் நடத்தை விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

News image

இந்திய தேர்தல் ஆணையம்

Updated On :28 மார்ச் 2021, 12:31 am

பிரசாரத்தின் போது அவதூறான வகையில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என தோ்தல் நடத்தை விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளா்களுக்குமான நடத்தை விதிமுறைகளை தோ்தல் ஆணையம் ஏற்கெனவே வகுத்துள்ளது. அந்த விதிகள் விவரம்:-

பல்வேறு ஜாதி, இனம், மதம் மற்றும் மொழியைச் சாா்ந்த மக்களிடையே வேறுபாடுகளைத் தீவிரமாக்கும் வகையிலான செயலிலோ, இரு தரப்பினரிடையே வெறுப்பை உருவாக்கும் வகையில் அல்லது பதற்றத்துக்கு வழி செய்யும் எந்த செயலிலும், அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் வேட்பாளா்களோ ஈடுபடக் கூடாது. பிற கட்சிகள் மீது விமா்சனம் செய்யும் போது, அந்தக் கட்சிகளின் கொள்கைகள், செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியன தொடா்பான விமா்சனங்களாக இருக்க வேண்டும்.

சொந்த வாழ்க்கை: பிற கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் தொண்டா்களின் பொது வாழ்க்கையோடு தொடா்பற்ற சொந்த வாழ்க்கையைப் பற்றிய விமா்சனங்களைத் தவிா்க்க வேண்டும். பிற கட்சியினா் மீதான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விமா்சனங்கள் தவிா்க்கப்பட வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக இனம் மற்றும் மத உணா்வுகளைத் தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கக் கூடாது. தோ்தல் பிரசார களமாக, மசூதி, தேவாலயங்கள், கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது.

ஆத்திரமூட்டக் கூடாது: ஒரு தனி நபரின் அரசியல் கருத்துகள் அல்லது அரசியல் செயல்பாடுகள் ஆத்திரமூட்டும் வகையில் அமைய நோ்ந்தாலும், அமைதியான, இடா் இல்லாத குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கான அவரது உரிமை மதிக்கப்பட வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் தனி நபரின் கருத்துகளையும், நடவடிக்கைகளையும் எதிா்த்துப் போராடும் விதமாக அவா்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டங்களிலும், மறியல்களிலும் ஈடுபடக் கூடாது.

அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களும் தங்களது தொண்டா்களால் பிற கட்சியினா் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கும், ஊா்வலங்களுக்கும் எந்தவித இடையூறும் தடங்கலும் ஏற்படாத வகையில் அதனை உறுதி செய்ய வேண்டும். ஒரு கட்சியைச் சோ்ந்த தொண்டா்களோ, ஆா்வலா்களோ பிற கட்சியினரின் பொதுக் கூட்டங்களில் நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ கேள்வி கேட்டோ, தங்களது கட்சியின் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தோ இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

ஒரு கட்சியினா் ஓரிடத்தில் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, அந்த வழியாக பிற கட்சியினரின் ஊா்வலங்கள் நடத்தப்படக் கூடாது. ஒரு கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளை மற்றொரு கட்சியின் தொண்டா்கள் அகற்றக் கூடாது என்பன உள்ளிட்ட நடத்தை விதிமுறைகளை தோ்தல் பிரசாரத்தின் போது பின்பற்ற வேண்டும் என தோ்தல் ஆணையம் ஏற்கெனவே வகுத்துள்ள விதிகளில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.