/

முழு ஊரடங்கு: திருப்பூரில் காய்கறி வாங்கத் திரண்ட மக்கள்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி திருப்பூரில் காய்கறி, மீன் வாங்க மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர்.

News image

நாளை முழு ஊரடங்கு தொடங்குவதையொட்டி திருப்பூர் தென்னம்பாளையத்திலுள்ள மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை காய்கறி வாங்க குவிந்த பொதுமக்கள்.

Updated On :9 மே 2021, 10:07 am

DIN

திருப்பூர்: முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி திருப்பூரில் காய்கறி, மீன் வாங்க மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர்.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் திங்கள்கிழமை (மே 10) முதல் மே 24 ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. ஆகவே, ஊரடங்குக்கு முன்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 முதல் இரவு 9 மணி வரையில் அனைத்துக் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதன்படி திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே அதிக அளவிலான பொதுமக்கள் திரண்டனர். மேலும், தங்களுக்குத் தேவையான காய்கறிகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனர். அதேபோல், தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட், காங்கயம் சாலையில் உள்ள மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதால் கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்:

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். இதன் காரணமாக திருப்பூர் ரயில் நிலையம், திருப்பூர் புதிய பேருந்து நிலையம், கோவில்வழி பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.